×

நீர்நிலைகளுக்கான கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு வேலூரில் ஒரே நாளில் 165 மி.மீ மழை பெய்தும் சொட்டு தண்ணீரை தேக்க முடியாத அவலம்: தொடர்ந்து சரியும் நீர்மட்டத்தால் மக்கள் கடும் அதிருப்தி

வேலூர்: வேலூரில் ஒரே நாளில் 165 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தும், நீர்நிலைகளுக்கான கால்வாய் ஆக்கிரமிப்புகளால் சொட்டு தண்ணீரை கூட தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 46 ஆயிரத்து 571 விவசாயிகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வேலூரில் பருவமழை பொய்த்துபோனதால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து சரிவதால் போர்வெல்களை நம்பி பயிரிடுபவர்களும் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 8.39 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் நிலவரப்படி 11.12 மீட்டராக நிலத்தடி நீர்மட்டம் இருந்தது. தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்து 11.43 மீட்டர் சென்றுவிட்டது. பெரும்பாலான இடங்களில் கடன் வாங்கி 1500 அடி ஆழத்துக்கு மேல் போர்வெல் அமைத்த விவசாயிகளும் சொட்டு தண்ணீர் கிடைக்காமல் கண்ணீர் வடிக்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வற்றிக் கிடக்கிறது. மாவட்டத்தில் உள்ள முக்கியமான பாலாறும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் நிம்மதியடையும் வகையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி நள்ளிரவு முதல் நேற்று முன்தினம் விடியற்காலை வரை கனமழை பெய்தது. இதில் மாவட்டத்தில் மொத்தமாக ஒரே நாளில் 730 மில்லி மீட்டர் வரை மழை பதிவானது. வேலூரில் 7 மணிநேரத்தில் 165 மி.மீ மழை பதிவாகியிருந்தது. இதனால் வேலூர் நேற்று முன்தினம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தொடர்ந்து நேற்றும் வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.வேலூரில் நேற்று முன்தினம் மழைநீர் வெளியேற வழியின்றி, சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வேலூர் மாங்காய்மண்டி, சேண்பாக்கம், கஸ்பா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவுநீர் கலந்த மழைவெள்ளம் புகுந்தது. கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதே குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததற்கு காரணம் என்று கூறி மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அதிகாரிகள் அவசர அவசரமாக மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட ெதாடங்கினர். ஆனால், அந்த நீரை தேக்கி வைக்கும் முயற்சி எதுவும் இல்லை என்பதுதான் வேதனை. வேலூர் மாநகராட்சியில் 25 ஆயில் என்ஜின்கள் மூலம் தேங்கியிருந்த மழைநீர் உறிஞ்சப்பட்டு கழிவுநீர் கால்வாய்களில் விடப்பட்டது. மேலும் படிப்படியாக வடிய தொடங்கிய மழைநீர் 2 நாட்களாக கழிவுநீர் கால்வாயில் கலந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வேலூரில் 110 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையிலும் கூட ஒரு சொட்டு தண்ணீரை சேமிக்க முடியாத அவல நிலையை எண்ணி விவசாயிகளும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், மழைநீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் போன்றவையே பெய்த மழையை பாதுகாக்க முடியாததற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் தடம் தெரியாமல் போய்விட்டது. மேலும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கான மழைநீர் வரத்து கால்வாய்கள் மற்றும் உபரி நீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டது. இதனால், நீர்நிலைகளுக்கு மழைநீர் வரத்து இல்லாமல் போய்விட்டது. இதை சாதகமாக்கி கொள்பவர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை எழுப்பிவிடுகின்றனர். நீர்நிலைகளை ஆக்கிரமித்து சிலர் பட்டா வாங்கிவிட்டனர்.நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அதிகாரிகளே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்குவது, சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருப்பதால்தான், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பெய்த கனமழை முழுவதுமாக வீணாகிவிட்டது. இனியும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படாமல் வேலூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புககளை அகற்ற வேண்டும். மழைநீர் வரத்து கால்வாய்களை மீட்க வேண்டும். அதேபோல், பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதற்கு மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோர்ட் உத்தரவிட்டும் அரசு அலட்சியம்
நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் நடந்த விசாரணையில், ‘நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற பொதுப்பணித்துறையில் சிறப்பு பிரிவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். நீர் மேலாண்மை செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வருவாய்த்துறை செயலர், பொதுப்பணித்துறை செயலர், மாநகராட்சி ஆணையர், மின்வாரிய தலைவர், குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். போலீசாரிடமிருந்து முழுமையான உதவி கிடைக்கவில்லை என்றால், ராணுவத்தின் உதவியை பெற்றுக்கொள்ளலாம். மாதம் ஒருமுறை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தலைமை செயலர் ஆய்வு செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும் பட்டா இருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பராபட்சமின்றி அகற்ற வேண்டும்  என்று கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் கோர்ட் உத்தரவுகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டுவதாகவும், இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகு வேலூர் மாவட்டத்தில் இதுவரை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் கூட எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூரில் மாயமான சூரிய குளம்
வேலூரின் மைய பகுதியான மாநகராட்சி அலுவலகம் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சூரிய குளம் இருந்தது. மலைபகுதிகளில் இருந்து வரும் மழைநீர் கால்வாய்கள் மூலம் நேரடியாக இந்த குளத்தில் வந்து சேரும்.  குளம் நிரம்பி வெளியேறும் தண்ணீர் கோட்டை அகழிக்கு செல்லும் வகையில் இருந்தது. இந்த சூரிய குளம் தான் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகளால் சூரிய குளத்துக்கான நீர்வரத்து கால்வாய்கள் அழிந்துவிட்டது. தொடர்ந்து குளமும் குப்பைகளை கொட்டி மேடாக்கி முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களால் தடம் தெரியாமல் போய்விட்டது. சூரிய குளத்தை மீட்டு மழைநீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : 165 mm, rainfall, one day, Vellore.
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...