×

மீண்டும் பிரிக்கப்படுகிறது மதுரை மாவட்டம் தனி மாவட்டமாகிறது திருமங்கலம்?: அமைச்சர்களுக்குள் கருத்துவேறுபாட்டால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல், தேனி தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டப் பிறகு, தற்போது திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க உத்தேச திட்டம் தயாராகி வரும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாவட்டம் பிரிக்கும் முயற்சிக்கு ஒரு அமைச்சர் ஆதரவாகவும், மற்றொருவர் எதிர்ப்பாகவும் இருப்பதாக வரும் தகவல்களால் பரபரப்பு கிளம்பியுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாணமாக இருந்தபோது அமைந்திருந்த 13 பெரிய மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தப் பிறகு, 1956 நவம்பர் 1ல் இந்த மாவட்டங்கள் நிர்வாக ரீதியாக அங்கீகரித்து நிறுவப்பட்டது. இதன்படி தற்போதைய மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் ஒரே மாவட்டமாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் இருந்து 1985 செப்டம்பர் 15ல் திண்டுக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. 1996 ஜூலை 25ல் தேனி மாவட்டம் தனியாக உருவாக்கப்பட்டது.

தற்போது மதுரை மாவட்டம் 3 ஆயிரத்து 742 சதுர கிமீ பரப்பில் அமைந்துள்ளது. மதுரை, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் ஆகிய 4 வருவாய் கோட்டங்களும், மதுரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, மேலூர் ஆகிய 11 வருவாய் வட்டங்களும் (தாலுகா) உள்ளன.உள்ளாட்சி அமைப்பு ரீதியாக மதுரை மாநகராட்சி, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 3 நகராட்சி, பரவை, சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, ஏ.வெள்ளாளபட்டி, டி.கல்லுபட்டி, எழுமலை, பேரையூர் ஆகிய 9 பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்களும், 420 கிராம ஊராட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி மதுரை மாவட்ட மக்கள் தொகை 30 லட்சத்து 41 ஆயிரத்து 38 ஆகும். இதில் ஆண்கள் 15,28,308. பெண்கள் 15,12,730. தற்போது இந்த மாவட்ட மொத்த மக்கள் தொகை 35 லட்சத்தை தாண்டுகிறது. 2021ல் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது.மதுரை மாவட்டத்தில் இருந்து தேனியை தனியாக பிரித்த, 23 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மீண்டும் மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வருவாய்த்துறை ஆய்வு நடத்தி அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாக தெரிகிறது.இதன்படி மதுரை நகரின் தென்திசையில் அமைந்துள்ள திருமங்கலம் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் ஆய்வு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, கள்ளிக்குடி, பேரையூர் ஆகிய 5 தாலுகாக்கள் இடம்பெறும் என தெரிகிறது.மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மதுரை மக்களவை தொகுதியில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகள் விருதுநகர் மக்களவை தொகுதியிலும், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய இரண்டும் தேனி மக்களவை தொகுதியிலும் இடம்பெற்றுள்ளன.வருவாய்த்துறை முதற்கட்ட ஆய்வின்படி திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டால், அதில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே இடம்பெற வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 38 ஆயிரத்து 568 சதுர கிமீ. இதில் கடைசியாக கடந்த 15ம் தேதி வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து அறிவிக்கப்பட்டபிறகு மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் உத்தேச திட்டத்தை நிறைவேற்றுவதில் அமைச்சர் உதயகுமார் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டதற்கு, ‘மாவட்டத்தை பிரிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்’ என்றார்.மாவட்டப் பொறுப்பில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தை பிரிக்கும் திட்டம் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது’’ என்றார்.

ஆதரவும்...  எதிர்ப்பும்...
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பெரிய மாவட்டங்களை பிரிப்பதை வரவேற்கலாம். அந்த அடிப்படையில் ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல், தேனி பிரிக்கப்பட்டு விட்டன. தற்போது மீண்டும் மதுரை மாவட்டத்தை பிரிக்க வேண்டுமென இங்குள்ள மக்கள் கேட்கவில்லை. அதற்கான தேவையும் ஏற்படவில்லை. ஆளும்கட்சியினரின் அரசியல் பின்னணியில் இந்தத் திட்டம் உருவெடுத்துள்ளதாகவே தோன்றுகிறது. ஒரு அமைச்சர் ஆதரவாகவும், இன்னொரு அமைச்சர் எதிர்ப்பதாகவும் அறிகிறோம். மதுரை மாநகராட்சி எல்லைக்குள் திருப்பரங்குன்றம், திருநகர் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எல்லை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளது. துணைகோள் நகரம் உருவாகி வருகிறது. மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது. இவை அனைத்தும் உத்தேச புதிய மாவட்டத்தில் சேர்க்கப்படும் சூழல் ஏற்படும்போது, மதுரையின் முக்கியத்துவம் கேள்விக்குறியாக மாறும்’’ என்றனர்.

வளர்ச்சி வேண்டுமே?
புதிய மாவட்டம் உருவாக்கப்படும்போது, அதன் வளர்ச்சி திட்டங்கள், புதிய தொழில் மேம்பாடு உருவாக்கப்பட வேண்டும். அதன்படி திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கிய பிறகு அங்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வளர்ச்சியை அரசு உருவாக்கவில்லை. அடிக்கடி வறட்சியை சந்திக்கிறது. இதன்விளைவாக இங்குள்ள மக்கள் குடிபெயர்வதால், அந்த மாவட்டத்தில் மக்கள் தொகை மெல்ல சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூரம்... பிரச்னையா?
திருநெல்வேலி மாவட்டத்திவ் 10 சட்டப்பேரவை தொகுதிகள் என்றாலும், அதன் எல்லை விரிந்து பரந்துள்ளது. ஆனால், அதே 10 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய மதுரை மாவட்டம் எல்கை விரிந்து பரந்ததில்லை. உலகப் புகழ்பெற்ற புராதன சிறப்பு மிகுந்த மதுரை நகரம் மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து திண்டுக்கல்லும், தேனியும் பிரிக்கப்பட்டபோது, அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.ஏனென்றால் அந்தந்த மாவட்டத்திலுள்ள பழநி, கம்பம் போன்ற நகரங்கள் நீண்ட தூரத்தில் உள்ளன. ஆனால் மதுரை நகருக்கு தற்போது மாவட்டத்தின் எந்த மூலையில் இருந்தும் அதிகப்பட்சம் ஒரு மணிநேரத்தில் பஸ்சில் வந்து சேர முடியும். அந்த அடிப்படையில்தான் 1996ல் மதுரை மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, உசிலம்பட்டியை தேனியில் சேர்க்க அப்பகுதி மக்கள் ஏற்க மறுத்து போர்க்கொடி தூக்கினர். பாரம்பரியம் மிகுந்த மதுரை மாவட்டத்தில் நீடிக்க விரும்பினர். இதை ஏற்று மதுரை மாவட்டத்திலேயே நீடிக்கும்படி அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.1985ல் ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்கத்தான் முதலில் திட்டம் தயாரானது. இதில் காரைக்குடி, தேவகோட்டை பகுதியை ராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்க திட்டமிட்டபோது தூரத்தை காரணம் காட்டி எதிர்ப்பு கிளம்பியது. அதோடு சிவகங்கை சீமைக்கு தனிச்சிறப்பு தேவை. அதை ராமநாதபுரம் சீமையுடன் சேர்க்கக்கூடாது என்றனர். இதை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஏற்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களாக பிரித்தார்.

Tags : Madurai District, becomes ,separate district, Thirumangalam
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...