×

வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து கஞ்சா விற்றவர் கைது: கல்லூரி மாணவர்கள் ஏஜன்டாக செயல்படுவது அம்பலம்

கோவை:  கஞ்சா பழக்கம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.தேனி, திண்டுக்கல் மற்றும் ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனை தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் நகரில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். ரயில் நிலையம் அருகே போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்த போது கையில் பையுடன் சென்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், தேனி ஆண்டிப்பட்டி அருகேயுள்ள தும்முக்குண்டு பகுதியை சேர்ந்த வன்னிய பெருமாள் மகன் மலைச்சாமி (33) என தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் வைத்திருந்த செல்போனில் கஞ்சா குறித்த விவரங்களை வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. ‘ஏ கிரேடு சரக்கு ரெடி, வாங்க வந்து வாங்கிங்க’ என அவர் கஞ்சா போட்டோவுடன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பியிருந்தார். பீளமேடு, உக்கடம், கணபதி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் வாடிக்கையாளர்களாக இருப்பதாக தெரிகிறது.

 கஞ்சா பழக்கம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து சரக்கு வரத்து விவரங்களை மலைச்சாமி பதிவிட்டு வந்துள்ளார். ஒரு பொட்டலம் 50 ரூபாய், 100 ரூபாய் என விற்பனை செய்து வந்துள்ளார். கல்லூரி மாணவர்கள் சிலர் இவருக்கு ஏஜன்டாக செயல்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ‘‘ தேனி வருசநாடு, திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. ஒரு கிலோ கஞ்சா 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து கோவையில் 16 ஆயிரம் ரூபாய் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறேன். எவ்வளவு கஞ்சா இருந்தாலும் ஒரிரு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடும். சிலர் எப்போது கஞ்சா வரும் என செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொண்டே இருப்பார்கள். கஞ்சா போதை இருந்தால் தான் சில மாணவர்கள் கல்லூரிக்கு செல்கிறார்கள். கஞ்சா மூலமாக அதிக வருவாய் கிடைப்பதால் என்னை போல் மேலும் பலர் போட்டி போட்டு கஞ்சா விற்பனை செய்கிறார்கள், ’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Arrested, selling ,cannabis , Watts Up group,College students ,agents
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...