×

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண் அணையான பவானிசாகர் அணைக்கு இன்று வயது 65

சத்தியமங்கலம்:  தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண்அணையான பவானிசாகர்  அணை இன்று 65ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948ம் ஆண்டு பவானி ஆறும் மோயாறும் கலக்குமிடத்தில் ரூ.10.50 கோடி செலவில் கட்டுமான பணி துவங்கப்பட்டது.தொடர்ச்சியாக 7 ஆண்டு நடந்த கட்டுமான பணி 1955ம் ஆண்டு ஆக.19ம் தேதி நிறைவு பெற்றது. அன்றைய தினம் அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பவானி ஆற்று பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் முழு கொள்ளளவான 32.8 டி.எம்.சி., நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த அணையின் கரையின் நீளம் சுமார் 8.78 கிலோ மீட்டர். அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சேறு கழித்து 105 அடி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அணையின் முழுத்தேக்க நீர்ப்பரப்பு 30 சதுர மைல். தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண்அணை என்ற பெருமையையும் இந்த அணை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கீழ்பவானி பிரதானக்கால்வாயின் நீளம் 200 கி.மீட்டராகும். பிரதான கால்வாயிலிருந்து 800 கி.மீ., நீளத்திற்கு கிளை வாய்க்கால்களும், 1900 கி.மீ., நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன. இந்த அணையில் ஆற்று மதகுகள் 9ம், கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3ம், நீர் வழிந்தோடும் மதகுகள் 9 என மொத்தம் 19 மதகு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அணையின் கட்டுமான பணி நடந்த போது 1953ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். 1950ம் ஆண்டுகளிலேயே மிக உயரிய தொழில்நுட்பமுள்ள இயந்திரங்களை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு தேவையான  இயந்திரங்கள் லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டது என அணை கட்டுமான பணிக்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் கூறுகின்றனர்.  மேலும் இந்த அணை முற்றிலும் மண்ணில் கட்டப்பட்டது. தற்போது 64 ஆண்டுகளை கடந்தும் அணையில் சிறிதுகூட விரிசல் ஏற்படாமல் உறுதித்தன்மை வாய்ந்த அணையாக உள்ளது. இந்த அணை கட்டப்பட்டதால் தரிசுநிலங்கள் நஞ்சை நிலங்களாக மாறின. இதனால் லட்சக்கணக்காண விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீர் வழங்க ஏதுவானது. நாடு போற்றும் இந்த அணை இன்றுடன் 64 ஆண்டுகளை கடந்து இன்று 65ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Tags : Bawanisagar Dam, South Asia's, largest soil dam, turns ,65 today
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்