×

உலகம் அழிந்து கொண்டிருக்கிறதா?

நன்றி குங்குமம் முத்தாரம்

‘‘உலகம் அழிவை நோக்கிய பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ஒரு அறிவியல் இணைய இதழ். கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் உலகின் பொருளாதாரம் நான்கு மடங்காக வளர்ந்துவிட்டது. மக்கள் தொகை இரு மடங்கு பெருகிவிட்டது. சந்தை 10 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன.

 இதுபோக மனிதன் தோன்றிய காலத்துக்கு முன்பில் இருந்து இப்போது வரைக்கும் 10 மில்லியன் உயிரினங்கள் அழிந்துவிட்டன. முன் எப்போதும் இல்லாத  அளவிற்கு இயற்கையும், பல்லுயிர்களும் பெரும் பிரச்சனையில் இருக்கின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மனிதனின் செயல்பாடுகளே.

அளவில்லாமல் பெருகிவிட்ட மக்கள் தொகை, அவன் கண்டுபிடிக்கும் புதுப்புது தொழில்நுட்பங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசுக்கள், இயற்கை வளங்களைச் சுரண்டுதல், சுரங்கங்களைத் தோண்டுதல், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதிப்போருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என எல்லாமும் இயற்கையின் மீதும் பல்லுயிர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அவற்றை அழிவை நோக்கி நகர்த்துகின்றன.

இந்த உயிரினங்கள், இயற்கையின் அழிவு என்பது மனிதனின் அழிவுதான். ஏனெனில் மனிதன் வாழ்வதற்குத் தேவையான இயற்கையை அவனால் எந்த தொழில்நுட்பத்தையும் கொண்டு உருவாக்கிட முடியாது. அதன் கருணையின்றி மனிதன் வாழ்வதென்பது சாத்தியமே இல்லை. உதாரணத்துக்கு உலகின் 70 சதவீத மருந்துப் பொருட்கள் இயற்கையிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன.

அவனின் உணவுத் தேவை இயற்கையிலிருந்து தான் பூர்த்தி செய்யப்படுகின்றன. ஆனால், தொடர்ந்து இயற்கையும், இயற் கையைச் சார்ந்த விஷயங்களும் மனிதனால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கையை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து எடுக்க வேண்டும்.
 
ஹாலிவுட் படங்களில் பூகம்பம், சுனாமி, எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்களாலும், குண்டு வெடிப்பு மற்றும் வில்லன்களாலும் உலகம்
அழியும். அப்போது சூப்பர் ஹீரோ அல்லது கதாநாயகன் உலகை அழிவிலிருந்து காப்பான். நிஜத்தில் அப்படி ஏதாவது நடந்தால் சூப்பர் ஹீரோ யாரும் வரமாட்டார்கள். நாம்தான் நம் உலகை தற்காத்துக்கொள்ள வேண்டும்.



Tags : Millions, organisms, pharmaceuticals
× RELATED நாட்டின் மின்நுகர்வு 110.34 பில்லியன்...