×

நரிக்குடி பகுதியில் பராமரிப்பின்றி பாழாகும் சுகாதார வளாகங்கள்: அதிகரிக்கும் திறந்தவெளி பயன்பாடு

திருச்சுழி: நரிக்குடி பகுதியில் பராமரிப்பின்றி சுகாதார வளாகங்கள் பாழாகி வருகின்றன. இதனால், பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க, ஊராட்சிதோறும் ரூ.பல லட்சம் செலவில், சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த வளாகங்கள் போதிய பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசி சில மாதங்களில் மூடப்படுகிறது. ஊராட்சி நிர்வாகங்களும், சுகாதார வளாகங்களை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. சில சுகாதார வளாகங்களில் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி, கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறைகளில் பழுதாகும் மின்மோட்டார்களை சீரமைப்பது கிடையாது.

பராமரிப்பு என்ற பெயரில், சுகாதார வளாகங்களில் பல லட்சம் ரூபாய்களை ஊராட்சி நிர்வாகம் செலவு செய்கிறது. ஆனால், மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. இதனால், அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. சுகாதார வளாகங்களை பயன்படுத்த, அவைகளை முறையாக பராமரிக்க வேண்டும். எப்போதும் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும். மின்விளக்குகள் பொருத்த வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு கிராமப்புறங்களில் உள்ள சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நரிக்குடி முருகன் கூறுகையில், ‘பல லட்சம் ரூபாயில் கட்டப்படும் சுகாதார வளாகங்கள் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதனால், பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. ஊர்தோறும் சுகாதார வளாகங்கள் பயனற்று கிடக்கின்றன. எனவே, கிராமங்களில் உள்ள சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்’ என்றார்.

Tags : Narikkudi, Health Complex, Open Space
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...