மழை வெள்ளத்துடன் சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் உப்புத்தன்மை குறித்து ஆய்வு

திருப்பூர்: திருப்பூரில் சமீபத்தில் பெய்த மழையினால் நொய்யல் ஆற்றின் வெள்ளம் பாய்ந்தபோது சாயக்கழிவு நீர் திறக்கப்பட்டதா? என்பதை அறியும் வகையில் உப்புத் தன்மையை அளவிடும் கருவி பொருத்தி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  திருப்பூரில் சாயப்பட்டறைகளிலிருந்து கழிவுநீரை பூஜ்ஜிய சதவீத முறையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுகிறது. இதற்காக மாநகரில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். சாயக் கழிவுநீர் ஆற்றில் திறந்து விடுவதாகவும் இதனால் ஆற்றின் உப்பு தன்மை அதிகரித்து நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் தொடர் புகார் காரணமாக திருப்பூருக்குள் நுழையும் மங்கலம் பகுதியில் இருந்து காசிபாளையம் வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீரின் உப்புத்தன்மையை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றின் மையப் பகுதியில் இதற்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு அதற்குள் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. அதில் பாயும் நீரின் தன்மையை இந்த கழிவுகள் உதவியோடு ஆன்லைன் மூலமாக கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திருப்பூரில் மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் திருப்பூர் மாநகரில் அணைப்பாளையம் தரை பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது வெள்ளம் குறைந்து ஆற்றில் தண்ணீர் பாய்கிறது. இதனையடுத்து போக்குவரத்து மீண்டும் அங்கு தொடங்கியது. வெள்ளத்தை பயன்படுத்தி ஆற்றில் சாயக்கழிவு நீர் திறக்கப்பட்டதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அணைமேடு பகுதியில் நொய்யல் ஆற்றில் மையப்பகுதியில் நீரின் உப்புத்தன்மையை அதிகரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கருவியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலமாக ஆற்றில் பாயும் நீரில் தன்மையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் என்றும்  கூறினர்.

Related Stories: