×

வட மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் யமுனா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹாத்திகுன்ட் மதகு திறக்கப்பட்டதால் நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லிக்கு இன்று மிக கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் புனித நீராடும் அனைத்து கரைகளிலும் ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் படகு சவாரியும் இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வெள்ளம் காரணமாக உத்தரகாசி-டோராடூன் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் நவான்சாஹர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் தத்தளித்து வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக் கிடந்த பலரை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் கூரைகளின் மேல் நின்றுக் கொண்டிருந்த ஆடுகளையும் படகுகள் மூலம் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லா உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மழைக்கும் நிலச்சரிவுக்கும் இதுவரை 30 பேர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏராளமானோர் காணவில்லை என அவர்களின் உறவினர்கள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Northern states, heavy flooding, people, normal life, impact
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...