×

கொடைக்கானல் அருகே குட்டியுடன் முகாமிட்டுள்ள யானை கூட்டம்: நள்ளிரவில் கிராமத்தில் உலாவருவதால் பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை, அஞ்சுரான்மந்தை, பாரதி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த 15 நாட்களுக்கு மேலாக முகாமிட்டு  விவசாய விளை நிலங்களையும், விவசாய பயிர்களையும்  சேதம் விளைவித்து வருகின்றன. இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் புலியூர் மற்றும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியாருக்குச்சொந்தமான காடுகளிலும், விவசாய தோட்டங்களிலும் முகாமிட்டு உள்ளன. இதனால் அங்கு வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் தோட்டப் பகுதிகளுக்கும், தோட்ட வீடுகளுக்கும் செல்லாமல் தனக்கு தெரிந்தவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தேவராஜ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்த 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் அங்கேயே தொடர்ந்து முகாம் இட்டு இருந்தன. இதனால் இப்பகுதி கிராம மக்கள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் கிராமத்தின் வீதிகளிலும் உலாவருவதால் மேலும் பீதியடைந்துள்ளனர், யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டாலும் யானைகள் இப்பகுதியினை விட்டு தற்போது வரை வெளியேறவில்லை எனவே கூடுதல் வனத்துறையினரையும் வேட்டை தடுப்பு காவலர்களையும் நியமித்து யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலியூர் கிராமத்தினர் மற்றும் பேத்துப்பாறை கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காட்டு யானை கூட்டத்தில் உள்ள குட்டி யானை மிகவும் சோர்வாக உள்ளதாகவும் தளர்ந்த நிலையில் நடந்து வருவதாகவும் இந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது வனத்துறையினர் இந்த குட்டி யானைக்கு ஏதாவது நிகழ்ந்து இருக்குமோ அல்லது விஷப் பொருள்கள் எதையும் உண்டு இருக்குமோ என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Tags : Kodaikanal, Elephant Meeting, Public, Fear
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...