போடியிலும் சிறுவனுக்கு பாதிப்பு: `டிப்தீரியாவை’ கோட்டை விட்ட தேனி பொதுசுகாதாரத்துறை.. மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போட தீவிரம்

தேனி: தேனி மாவட்டத்தில் ‛டிப்தீரியா’ வைரஸ் ஒரு மாதத்திற்கு முன்பே பாதித்தும், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மட்டும் தடுப்பு நடவடிக்கை எடுத்த பொதுசுகாதாரத்துறை மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தடுப்பூசி போடவில்லை. தற்போது போடி அருகே ராமகிருஷ்ணாபுரத்தில் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் கடந்த மாதம் 5 வயது சிறுவனுக்கு ‛டிப்தீரியா’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பல மாவட்டங்களில் டிப்தீரியா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுமாறு மாநில பொதுசுகாதாரத்துறை இயக்குனரகம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

தேனி மாவட்டத்தில் நீண்ட விடுப்பில் இருந்த சுகாதார துணை இயக்குனர் பணிக்கு வந்த ஓரிரு நாளில் மீண்டும் மீட்டிங்’ என காரணம் காட்டி சென்னை சென்று விட்டார். இதனால் இங்குள்ள பணியாளர்களை வேலை வாங்க ஆள் இல்லை. எனவே, இவர்கள் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மட்டுமே தடுப்பூசி போட்டனர். மாவட்டம் முழுவதும் போட்டிருந்தால் அடுத்தடுத்த பாதிப்புகளை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். தற்போது போடி பொட்டிபுரம் அருகே ராமகிருஷ்ணாபுரம் என்ற கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு டிப்தீரியா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: