தொடர் சாரல் மழையால் திராட்சையில் அழுகல் நோய்: கம்பம் விவசாயிகள் கவலை

கம்பம்:  கம்பம் பள்ளத்தாக்கில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால்  பன்னீர் திராட்சையில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியான சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, கூடலூர், குள்ளப்ப கவுண்டன்பட்டி மற்றும் ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் திராட்சை  பயிரிடப்பட்டுள்ளது. இந்த திராட்சை கேரளாவிலுள்ள எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து போது  பன்னீர் திராட்சை கொள்முதல் விலை 100 ரூபாய் வரை இருந்தது. சில்லரை விலைக்கு 240 ரூபாய் வரை விற்கப்பட்டது.

தற்போது தொடர்ந்து பெய்த கனமழையால்  திராட்சை ஏற்றுமதி இல்லாமல் நின்று போனது. தற்சமயம் பன்னீர் திராட்சை கிலோ 35 ரூபாய்க்கு  கொள்முதல் விலையாகவும், 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை சில்லரை விலையில் விற்கப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `` தென்மேற்கு பருவமழையால் கேரளாவிற்கு திராட்சை விற்பனை இல்லாமல் போனது. தேனி மாவட்டத்தில் பெய்த சாரல் மழையால் உள்ளூர் வர்த்தகமும் குறைந்துள்ளது. அத்துடன் மழையின் காரணமாக திராட்சையில் அழுகல் நோய் அதிகமாக ஏற்பட்டுள்ளது. எனவே, திராட்சை விவசாயிகள் அனைவரும் மிகுந்த நஷ்டத்தில் இருக்கிறோம்’’ என்றனர்.

Related Stories: