மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்: சிஐடியு நிர்வாகி பேட்டி

நெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால் மின்சாரம் கூடுதல் பணம் கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மோடி அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் மற்றும் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக முக்கிய துறையான மின்வாரியத்தையும் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மின்சாரம் என்பது உருளைகிழங்கு, தக்காளி வியாபாரம் அல்ல என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும். .

இது ஆபத்தானதாகும். அரசின் இந்த முயற்சியை முறியடிக்க தமிழகத்தில தொமுச போன்ற அமைப்புகளுடனும் இந்தியா முழுவதும் தொழிற்சங்க அமைப்புகளுடனும் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மின்துறையில் 40 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை முறையான விதிகளின்படி தகுதியுள்ள நபர்களை நியமித்து நிரப்பவில்லை. சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்துள்ளனர். அவர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையிலான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் மீதான அரசின் செயல்பாடுகள் அதிருப்தி தருகின்றன. இனியும் தாமதிக்காமல் 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதற்காக தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.

Related Stories: