×

விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றபோது குமரி முன்னாள் பெண் கவுன்சிலர் ரத்தவாந்தி எடுத்து மர்மசாவு: நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை

வள்ளியூர்: வள்ளியூர்  அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லபட்ட  குமரி முன்னாள் பெண் கவுன்சிலர்  ரத்த வாந்தி எடுத்து இறந்தார்.  நாகர்கோவில்  வழுக்கம்பாறையைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். நெல்லை மாவட்டம், கூடங்குளம்  அணுமின் நிலைய வளாகத்தில் பயர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் மீது  சிறுமியை சில்மிஷம் செய்ததாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்  போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது. இவரை போலீசார்  தேடிவந்தனர். தொடர் விசாரணையில்  குமரி மாவட்டம் கருங்கல் அருகே கப்பியறையை சேர்ந்த ஒரு  பெண்  வீட்டில் கிறிஸ்டோபர்  பதுங்கியிருப்பதை அவரது செல்போன் டவர் காட்டியது. இதையடுத்து மகளிர்  போலீசார் நடத்திய விசாரணையில் அவர் லீலாபாய் (45) என்பதும், கப்பியறை பேரூராட்சி முன்னாள்  கவுன்சிலர் என்பதும் தெரிய வந்தது. கிறிஸ்டோபரை கைது செய்ய லீலாபாய் வீட்டிற்கு மகளிர் போலீசார் சென்றனர்.  போலீசைக் கண்டதும் கிறிஸ்டோபர் தப்பியோடிவிட்டார்.இதையடுத்து  லீலாபாயை விசாரணைக்காக வள்ளியூருக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை  நடத்தி ‘லாக்கப்’பில் அடைத்து  வைத்திருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவர் திடீரென ரத்த வாந்தி  எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து அவரை  கருங்கல்லில் கொண்டு போய் விடுவதற்காக போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றனர். காவல்கிணறை கடந்து சென்றபோது லீலாபாய் திடீரென  இறந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து  இதுபற்றி வள்ளியூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். போலீசார் கஸ்டடியில் லீலாபாய் மரணம்   நிகழ்ந்ததால், குற்றவியல் நீதிபதி முன்புதான் பிரேத பரிசோதனை செய்யப்பட   வேண்டும். இதன்படி நேற்று மதியம்    முதல் தகவல் அறிக்கை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் சார்பில் தாக்கல்   செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து, மாலை 4.40 மணிக்கு வள்ளியூர்  குற்றவியல்  நீதிபதி ஹலீமா முன்னிலையில் நாகர்கோவில்  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.   பிரேத பரிசோதனை  அறிக்கை கிடைத்த  பின்னரே  லீலாபாய் மகளிர் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தாரா அல்லது நோயினால்  இறந்தாரா என்பது தெரியவரும். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இறந்து  போன லீலாபாய் 2001ம் ஆண்டில் கப்பியறை பேரூராட்சியில் கவுன்சிலராக  இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்து  விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியை பிரிந்த கிறிஸ்டோபருக்கும்  லீலாபாய்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு  பல ஆண்டுகளாக  கணவன்  - மனைவி போல் வாழ்ந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : investigation, Former, Kumari ,woman ,councilor ,murdered
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...