×

மக்களிடம் மனுக்களை பெற்று 1 மாதத்தில் தீர்வு தமிழகம் முழுவதும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்: சேலத்தில் இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சேலம்: தமிழகம் முழுவதும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை அரசு அமலுக்கு கொண்டு வருகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இன்று காலை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதுபோக தாலுகா அளவில், தாசில்தார்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் தமிழக சட்டமன்றத்தில், 110 விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், தமிழகம் முழுவதும் மக்கள் குறைகளை தீர்க்க, நேரடியாக கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் வார்டுகளுக்கு சென்று மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, நிவர்த்தி செய்ய முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சித்துறை மற்றும் பிறத்துறை அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் ஒரு குறிப்பிட்ட நாளில் கிராமங்கள், நகரில் வார்டுகளுக்கு சென்று மனுக்களை பெற்று, ஒரு மாதத்திற்குள் நிவர்த்தி செய்வார்கள். இத்திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அறிவித்தார்.

 இதன்படி, முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம், இன்று சேலத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது. சேலத்திற்கு வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை 9.30 மணிக்கு, இத்திட்டத்தை தனது சொந்த தொகுதியான இடைப்பாடிக்கு உட்பட்ட வனவாசியில் தொடங்கி வைக்கிறார். வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கவுள்ளார். தொடர்ந்து, காலை 11 மணிக்கு இடைப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மக்களிடம் மனுக்களை பெறுகிறார்.



Tags : Receive petitions, Tamil Nadu,Program,Chief Minister ,Salem
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...