எந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்?

* ஏசி ரூமில் உட்கார்ந்து ஆலோசிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்

* கமிஷனில் இருந்த ஆர்வம் திட்ட வடிவமைப்பில் இல்லை

சென்னை: திட்ட வடிவமைப்பு மற்றும் அறிக்கை தயாரிப்பில் மெத்தனம் காட்டியதால் மத்திய அரசு நிதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு எந்த வங்கியிடம் ₹20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதில், நீர்வளப்பிரிவு மூலம் அணைகள், ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, சிறிய அளவிலான பணிகள் என்றால் தமிழக அரசின் நிதியுதவி உடனும், பெரிய அளவிலான திட்டப்பணிகள் என்றால் மத்திய அரசின் நிதியுதவி உடன் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக, மத்திய அரசின் ஏஐபிபி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி கேட்டு மாநில அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்து நிதி கேட்கிறது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக மத்திய அரசு நிதியுதவி தருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்போது நபார்டு வங்கி, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கள் மூலம் கடனுதவி பெற்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்தாண்டு ஏரிகள், தடுப்பணை, நதிகள் இணைப்பு திட்டம், புதிய அணைக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசும் கடும் நிதிச்சுமையில் தவித்து வருவதால் பெரிய அளவிலான திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது சாத்தியமில்லை. எனவே, தற்போது இந்த திட்ட பணிகளை எந்த வங்கிளில் கடன் பெற்று செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏசி ரூமில் உட்கார்ந்து ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே, குடிமராமத்து திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்காக வங்கிகளில் கடன் வாங்கி தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாங்கிய கடன் மட்டுமே தற்போது ₹20 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் ஆண்டிலும் பல்வேறு திட்டப்பணிகளை கடன் வாங்கி செயல்படுத்துவது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆலோசித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி தரும் நிலையில், அந்த நிதியை பெறுவதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறும் போது, கடந்த காலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் உடன் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடிக்கடி பேசி, திட்ட பணிகளுக்கு நிதி பெற்று வந்தனர். ஆனால், இப்போது அதிகாரிகள் யாரும் மத்திய அரசு அதிகாரிகள் உடன் நெருக்கம் காட்டுவதில்லை. அனைவரும் அரசியல், கமிஷனில் கவனத்தை திருப்பியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவர்கள் ஏதாவது திருத்தம் செய்ய சொன்னால் கூட நிதி தர மறுக்கின்றனர் என்று தவறாக தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதை நம்பி அரசும் வங்கிகளில் கடன் வாங்கி திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதே நிலை நீடித்தால் அரசின் கடன் சுமை  மேலும் அதிகரிக்கும்’ என்றனர்.

Related Stories: