×

கொலை, கொள்ளையை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிஜிட்டல் லாக்கர்’ நடைமுறைப்படுத்த நிர்வாகம் திட்டம்

சென்னை: தமிழகத்தில் 5 ஆயிரத்து 152 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் விற்பனைக்கு ஏற்றவாறு ஏ,பி,சி என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பணத்தை ஊழியர்களே நேரடியாக வங்கிகளில் செலுத்த வேண்டும். சென்னையில் மட்டுமே வங்கி ஊழியர்கள் நேரடியாக வந்து பணத்தை வசூல் செய்து செல்வார்கள். இதனால், வெளிப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் இதே நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் இருந்து நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்காக பல கட்ட போராட்டங்களையும் ஊழியர்கள் நடத்தியுள்ளனர். இந்தநிலையில், கடந்த 14ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த ஊழியர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு கடையில் இருந்த விற்பனை பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து நேற்று முன்தினம் 8 டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தின. இந்தநிலையில், பணத்திற்காக ஊழியர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கவும், பணத்தை பாதுகாப்பாக வைக்கவும் ஏ.டி.எம் இயந்திரத்தை போன்ற வடிவமைப்புடன் கூடிய புதிய டிஜிட்டல் லாக்கர் பணம் வைக்கும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் ₹2 லட்சம் முதல் ₹5 லட்சம் வரையிலும் சில கடைகளில் அதற்கு மேலும் விற்பனையாகிறது. இரவு நேரங்களில் பணத்திற்காக ஊழியர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதேபோல், கடைகளுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பதும் அதிகரித்தவாறு உள்ளது. இதை தடுக்க நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அனைத்து கடைகளிலும் ஏ.டி.எம் இயந்திரங்களை போன்ற டிஜிட்டல் லாக்கர் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெமோ நாளை அதிகாரிகள் மத்தியில் நடைபெற உள்ளது. எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் இந்த லாக்கர்கள் இருக்கும். இதனால், விற்பனை பணம் கடைகளிலேயே பாதுகாப்பாக இருக்கும். இதை குறிப்பிட்ட வங்கி ஊழியர்களே வந்து தான் திறக்க முடியும். அதன்படி, இது வடிவமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : prevent murder, robbery, implement ,digital locker
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...