×

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூரில் 28ம் தேதி காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்

சென்னை: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சாவூரில் வருகிற 28ம் தேதி மாபெரும் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:மத்திய- மாநில அரசுகளின் அலட்சியப் போக்கின் காரணமாக, கடந்த ஏழாண்டு காலத்திற்கும் மேலாக, காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. தொடர்ந்து குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படாமலும் ஆளும் மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாயத் தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன.அதனால் விவசாயிகள் தற்கொலையும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்லும் அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அத்துடன்,  காலம் காலமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் காவிரி படுகை பகுதிகளில் இதுவரை எந்த அரசாங்கமும் விளைவிக்காத கேடாக, இன்றைய மத்திய அரசு வளமான விவசாய பூமியை மலடாக்கும் முயற்சியான ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து, அதனை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி, அதன்மூலம் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கிட முயற்சி நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா விவசாயிகளின்  இத்தகைய அவல நிலையை போக்கிடவும் - காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடக் கோரியும், வருகிற 28ம் தேதி(புதன்கிழமை) காலை முதல் இரவு வரை, தஞ்சாவூர் மகாராஜா திருமண மண்டபத்தில் மாபெரும் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.இக்கருத்தரங்கத்தின் நிறைவுப் பேருரையினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், எம்எல்ஏ., தலைமை வகிக்கிறார். தஞ்சை எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி.,  திருவிடைமருதூர் செ.இராமலிங்கம் எம்.பி., திமுக விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி.இராமலிங்கம், கரூர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தொடக்க உரை ஆற்றுகிறார். திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்புரை ஆற்றுகிறார். கருத்தரங்க முடிவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., நன்றி கூறுகிறார். டெல்டா விவசாயிகள் கருத்தரங்கத்தில் காவிரி டெல்டா பகுதி மாவட்ட செயலாளர்களான கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ., நாகை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகன், நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கௌதமன், புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ரகுபதி, எம்எல்ஏ, புதுக்கோட்டை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ., திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் தியாகராஜன், அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், புதுச்சேரி-காரைக்கால் மாநில அமைப்பாளர் ஏ.எச்.எம். நாஜிம், உ.மதிவாணன்,எம்எல்ஏ., எம்எல்ஏக்கள் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, எம்.இராமச்சந்திரன், சாக்கோட்டை அன்பழகன், எ.சௌந்திரபாண்டியன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், ப.ஆடலரசன், ஸ்டாலின்குமார்,  துரை கி.சரவணன், சபா.இராஜேந்திரன் மற்றும் காரைக்கால் கீதா ஆனந்தன், எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கத்தில், தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாயச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Declare , protected , Farmers Symposium in, MK Stalin
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்