×

டாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வை 8,401 பேர் எழுதினர்: ஒரு வாரத்தில் தேர்வு முடிவு என அதிகாரி தகவல்

சென்னை: டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று 9 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை 8 ஆயிரத்து 401 பேர் எழுதினர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 152 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 26 ஆயிரத்து 56 ஊழியர்கள் பல்வேறு பணிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி 500 பேருக்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்க திட்டமிடப்பட்டது.  அதன்படி, இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி, இத்தேர்வை எழுத 8 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்தனர். இந்தநிலையில், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வுக்கு தடை விதித்தது. பின்னர், நடந்த விசாரணையில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, 500 காலி பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர் தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடத்தப்படும் என நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது.  இத்தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களில், பாடத்திட்டங்கள் குறித்தும், தேர்வை எதிர்கொள்வது குறித்தும் டாஸ்மாக் அதிகாரிகள் மூலம் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது. இந்தநிலையில், டாஸ்மாக் நிர்வாகம் தேர்வு தேதியை மாற்றி ஆகஸ்ட் 18ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவித்தது. அதன்படி, 500 காலி பணியிடங்களுக்கான இத்தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 9 மையங்களில் நேற்று நடைபெற்றது. 500 காலிபணியிடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்வை 8 ஆயிரத்து 401 பேர் எழுதினர். 325 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : 8,401 people,junior ,assistant,Information
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி