மேலும் 2 நாளுக்கு மழை நீடிக்கும்: சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் நீடிக்கும் வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இடையிடையே தென்மேற்கு பருவக்காற்றால் மழை பெய்கிறது. இருப்பினும் பெரும்பாலும் தமிழகத்தில் வெயில் நீடித்து வருவதால் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஆலங்காயத்தில் 150  மிமீ மழை பெய்துள்ளது. திருப்பத்தூர் 100 மிமீ, திருப்புவனம்,திருச்சுழி, வாணியம்பாடி 90 மிமீ, ஆம்பூர் 80 மிமீ, திருவாலங்காடு, மதுராந்தகம் 70 மிமீ, பெரும்புதூர், சாத்தூர், செங்கல்பட்டு 60 மிமீ, செஞ்சி, செய்யார், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, திருவள்ளூர், தாம்பரம் 40மிமீ, மாமல்லபுரம், தூத்துக்குடி, சென்னை அண்ணா பல்கலைக் கழகம், விருதுநகர், சென்னை விமான நிலையம் 30மிமீ, காஞ்சிபுரம், வந்தவாசி, கேளம்பாக்கம் 20மிமீ மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்று காலையில் இருந்தே பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. மதியத்துக்கு மேல் மழை விட்டது. இதனால் காலை நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று வெயில் நிலவியது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது.இது வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுதவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related Stories: