காணாமல் போய் 4 மாதத்திற்கு பிறகு மனநலம் பாதித்த சிறுமியை தந்தையுடன் சேர்த்த கூகுள்

புதுடெல்லி: டெல்லியில் மனநலம் பாதித்த 12 வயது சிறுமி காணாமல் போய் 4 மாதத்திற்குப் பிறகு, அவளது தந்தையுடன் சேர்த்து வைக்க போலீசாருக்கு கூகுள் மேப் உதவி உள்ளது.டெல்லி கீர்த்தி நகரில் கடந்த மார்ச் 21ம் தேதி ஹோலிப் பண்டிகை அன்று 12 வயது சிறுமி இ-ரிக்‌ஷா ஒன்றில் ஏறி உள்ளார். ரிக்‌ஷா ஓட்டுநர் எங்கு செல்ல வேண்டுமென கேட்டதற்கு, அந்த சிறுமி பதிலளிக்கவில்லை. இதனால், சிறுமியை  கீர்த்தி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு விசாரித்ததில், சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது. அவரது சொந்த ஊர் குர்ஜா கிராமம் என்றும், தந்தையின் பெயர் ஜித்தன் என்றும் கூறியிருக்கிறார். குர்ஜா கிராமம் எங்கிருக்கிறது என சிறுமிக்கு சொல்லத் தெரியவில்லை. இதனால் டெல்லியில் குர்ஜா உச்சரிப்பை கொண்ட சில பகுதிகளுக்கு சிறுமியை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு யாராலும் சிறுமியை அடையாளம் காண  முடியவில்லை. உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்தில் குர்ஜா கிராமம் இருப்பது தெரியவந்து, அங்கு சிறுமியை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அங்கும் அவளது குடும்பத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், குர்ஜா கிராமத்திற்கு அருகில் உள்ள வேறு ஏதாவது ஊர் பற்றி தெரியுமா என சிறுமியிடம் போலீசார் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனது தாயின் சொந்த ஊர் சோன்பர்சா கிராமம் சகாபர் ஏரியா என்றும் கூறியுள்ளார். இதை வைத்து கூகுள் மேப்பில் போலீசார் தேடியுள்ளனர். அப்போது உபி.யின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் சாகர்பர், சோன்பர்சா, குர்ஜா ஆகிய  கிராமங்கள் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று சிறுமியின் குடும்பத்தை போலீசார் கண்டுபிடித்தனர். 4 மாதத்திற்குப் பிறகு சிறுமியை அவளது தந்தை ஜித்தனுடன் சேர்த்து வைத்தனர்.மருத்துவ சிகிச்சைக்காக கீர்த்தி நகர், ஜேஜே காலனியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு மகளை அழைத்துச் சென்ற போது அவள் மாயமாகி விட்டதாக ஜித்தன் கூறினார். அவரது மனைவியும் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த ஒன்றரை  வருடத்துக்கு முன் அவரும் இதேபோல் காணாமல் போய் பின்னர் மீட்கப்பட்டதாக ஜித்தன் தெரிவித்தார்.

Related Stories: