×

பூங்காவாக மாறுவதில் சிக்கல் வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியை அரசு புறக்கணிப்பு: கிடப்பில் பொதுப்பணித்துறை அறிக்கை

சென்னை: சென்னை மாநகரின் வளர்ச்சி காரணமாக 256 ஏக்கராக இருந்த வேளச்சேரி ஏரி தற்போது 50 ஏக்கராக சுருங்கி உள்ளது. தற்போது இந்த ஏரி சுற்றுப்புற குடியிருப்புகளின் கழிவு நீர் கலந்து விடும் ஓடையாக மாறி விட்டது. மேலும், இந்த  ஏரிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு மாசடைந்து காணப்படுகிறது. இந்த ஏரிகளை மீட்டெடுக்கும் வகையில் வேளச்சேரி ஏரி சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதாவது படகு குழாம், நடைபயிற்சி பாதை, இருக்கைகள் வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக,   பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை பொதுப்பணித்துறைகே திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஏரிக்கு நிதி ஒதுக்கவும் தமிழக அரசு மறுத்து விட்டதாக  கூறப்படுகிறது. இதனால், வேளச்சேரி ஏரியை புனரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் ஏரியை மாற்றுத்திட்டத்தின் கீழ் புனரமைக்கவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாதவரம், வேளச்சேரி, ஏரியையும் இந்த திட்டத்தின் மூலம் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் அலுவலகத்தில் தற்போதைக்கு  இப்பணிக்கு நிதி ஒதுக்க  முடியாது எனக்கூறி விட்டனர். இதனால், இந்த ஏரியை எம்எல்ஏ நிதியை பெற்று அதன் மூலம் புனரமைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். ஆனால், இதற்கு அரசின் அனுமதி கிடைக்குமா என்பது தான் தெரியவில்லை’  என்றார்.



Tags : park, Reconstruction , Velachery, work:,Public Works Department
× RELATED திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா...