பத்திரம் பதிவு செய்வதில் மோசடி பதிவுத்துறை மீது 327 வழக்குகள் நிலுவை: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: பத்திரம் பதிவு செய்வதில் மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்த 327 வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் நிலுவையில் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், பாக பிரிவினை, தான பத்திரம், செட்டில் மென்ட், உயில் பத்திரம், கிரயபத்திரம், விற்பனை பத்திரம்  உள்ளிட்ட பத்திரங்கள் சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்களாக உள்ளது. இத்தகயை பத்திரங்களை பதிவு செய்யப்படும் போது சில நேரங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகிறது. குறிப்பாக, சார்பதிவாளர்கள் சிலர் சமூக விரோதிகள் உடன் போலி ஆவணங்கள் தயார் செய்து பத்திரம் பதிவு, புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு, ஒரு நபருக்கு தெரியாமல் பத்திரங்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை ஐஜி மீது வழக்கு தொடருகின்றனர். இது ேபான்று கடந்த 2010ல் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  பதிவுத்துறை ஐஜிக்கு எதிராக 254 வழக்குகளும், மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர்களுக்கு எதிராக 73 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்காமலும் பதிவுத்துறை  ஐஜி அலுவலகம் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தற்போது வரை நிவாரணம் கிடைக்க  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல வழக்குகளில் சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர் மீது தவறு இருப்பதால், அந்த வழக்குகளில் தீவிரம் காட்டும் பட்சத்தில்  அவர்கள் சிக்கி கொள்வார்கள் என்பதற்காக பதிவுத்துறை ஐஜி அலுவலகம் தாமதம் செய்வதாக பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் கூறும் போது, ‘சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர்கள் விதிகளை மீறி பத்திரம் பதிவு செய்யும் போது தான் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடருகின்றனர். இந்த வழக்கின் தன்மையை கவனத்தில் கொண்டு  பதிவுத்துறை ஐஜி உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி அலுவலகம் காலதாமதம் செய்வதால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக பயன் கிடைப்பதில்லை. இந்த நிலையில், தவறு யார் செய்திருந்தாலும் அதன் மீது உரிய நடவடிக்கை  எடுக்கும் வகையில் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: