வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு குறித்து எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களுடன் 29, 30ம் தேதிகளில் கருத்து கேட்பு: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பு

சென்னை: வேலூர் மாவட்டம் 3ஆக பிரிப்பு தொடர்பாக எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களுடன் வருகிற 29, 30ம் தேதிகளில் கருத்து கேட்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அறிவித்துள்ளார். தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தின் போது வேலூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை  தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதன் முதல்கட்ட நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய முக்கிய பிரமுகர்களிடமும், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற  அமைப்பினர்களின் கருத்துக்களை கேட்பதற்கான கூட்டம் வருகிற 29,30 ஆகிய தேதிகளில் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது.

29ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை வேலூரில் ேவலூர் மாவட்டத்தில்  உள்ள அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும், காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை வேலூர் வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற  அமைப்பினருடன் கருத்துக்கள் கேட்கப்படும். 29ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திருப்பத்தூரில் திருப்பத்தூர் வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும்.  30ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராணிப்ேபட்டையில், ராணிப்பேட்டை வருவாய் கோட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் பிற அமைப்பினரை சார்ந்தவர்களிடம் கருத்து  கேட்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: