வாட்டர் ஹீட்டரை போட்டபோது விபரீதம் சுடுதண்ணீர் கொட்டி 2 குழந்தைகள் பலி: மீஞ்சூர் அருகே சோகம்

சென்னை: மீஞ்சூர் அருகே வாட்டர் ஹீட்டரை போட்டபோது அதிலிருந்து சுடுதண்ணீர் திடீரென அதன் கீழே இருந்த இரண்டு குழந்தைகள் மீது கொட்டியது. இதில் உடல் கருகிய 2 குழந்தைகளும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தை ேசர்ந்தவர் மனோகரன். இறந்துவிட்டார். இவரது மனைவி அனிதா. கணவர் இறந்த பிறகு காட்டூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு  குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனோகரனின் தாய்  முருகம்பாள் இரண்டு குழந்தைகளோடு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலை நேரத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, அனிதா குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வாட்டர் ஹீட்டரை போட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வாட்டர் ஹீட்டர் சூடாகி டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர்  கொதிக்க ஆரம்பித்தது. தண்ணீர் கொதிக்கும் அதிர்வினால் டேபிள் மேல் இருந்து பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து டேபிளில் இருந்து கீழே விழுந்தது. இதில், கீழே படுத்து இருந்த நர்சிங் (4), சோபிதா (2) ஆகிய இரண்டு குழந்தைகள்  மீதும் பயங்கர சூடாக இருந்த தண்ணீர் கொட்டியது. இதில் இருவரின் உடல்களும் வெந்து ெகாப்புளங்கள் உருவானது. குழந்தைகள் வலி தாங்க முடியாமல் அழுது துடித்தனர்.

அப்போது தூங்கிக் கொண்டிருந்த முருகம்மாள் அதிர்ச்சி அடைந்து எழுந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளின் உடல்களும் வெடிப்பு வெடிப்பாக காணப்பட்டது. அவர்கள் வலியால் துடிதுடித்து கொண்டிருந்தனர். உடனே அவர்களை சென்னை  கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு இரு குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த இரு குழந்தைகளும் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக அடுத்தடுத்து  உயிரிழந்தனர். குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததை கண்டு குழந்தையின் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் துடிதுடித்து கதறி அழுதனர். இதுகுறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த  சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: