வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலிகள் மீது கற்கள் வீசிய 6 இளைஞர்களுக்கு அபராதம்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்தபோது, வெள்ளை புலிகள் மீது கற்கள் வீசிய 6 இளைஞர்களுக்கு அபராதம் விதித்து, வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னையை அடுத்த, வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகையான விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனை காண தினமும்,  ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

 ஞாயிற்றுகிழமையான நேற்று விடுமுறை நாள் என்பதால், பூங்காவுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் பார்வையாளர்கள் வந்தனர். புலிகள் உலாவிடத்துக்கு சென்ற இளைஞர்கள் 6 பேர் வெள்ளை புலிகளை பார்த்து புலிகளை போன்று உறுமி  உறுமி அழைத்தனர். ஆனால், புலிகள் திரும்பி பார்க்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த 6 பேரும் வெள்ளை புலிகள் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும், அங்கிருந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து 6 இளைஞர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை கண்டதும் மற்ற பார்வையாளர்கள் ஓட்டம் பிடித்தனர். கையும்களவுமாக பிடிபட்ட 6  இளைஞர்களிடமும் தலா 500 அபராதம் வசூலித்தனர். பின்னர், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இளைஞர்களிடம் வசூலித்த தொகையினை விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு விலங்குகளின் பராமரிப்பு செலவுக்காக வழங்கப்பட்டன.

Related Stories: