×

பணம் கொடுத்து அழைத்து வரமாட்டோம், பிரியாணியும் கிடையாது அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படும் : வைகோ அறிவிப்பு

சென்னை: அண்ணா பிறந்த நாள் மாநாட்டில் தொண்டர்களுக்கு தயிர், சாம்பார் சாதம் வழங்கப்போவதாக வைகோ கூறியுள்ளார். மேலும் பிரியாணி வழங்க மாட்ேடாம் என்றும் அறிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதிமுகவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாள் விழாவை மிகவும் சிறப்பாக முழு  நாள் மாநாடாக நடத்தப் போகிறோம். அதில் வரும் தொண்டர்கள்  அமர்வதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்படும், 75,000 பேருக்கு பகலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்குவோம். தொண்டர்களை காசு கொடுத்து அழைத்து வரமாட்டோம். பிரியாணி தரமாட்டோம், காலையில் இருந்து மாலை வரை  தொண்டர்கள் அசையாமல் இருக்க வேண்டும். இந்த மாநாட்டில் முக்கிய தலைவராக பரூக் அப்துல்லாவை அழைத்துள்ளேன். அவர் வருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் 4ம் தேதி இரவு என்னிடம் பேசினார். 5ம் தேதி காஷ்மீரை  சிதைத்து விட்டனர். இந்த சமயத்தில் பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. தொலைபேசி இணைப்புகள் தொடங்கிவிட்டதாக மத்திய அரசு பச்சை பொய் கூறுகிறது. அவரை  வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

அதேபோல் உமர் அப்துல்லா, முக்தி முகமதி ஆகியோரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பரூக் அப்துல்லாவை எங்கள் மாநாட்டுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியேற்றாவிட்டால் பரூக் அப்துல்லாவுடன் தொடர்பு கொண்டு அடிப்படை  உரிமையை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடச்செய்து பரூக் அப்துல்லாவை எப்படியாவது அழைத்துவருவேன். அந்த மாநாட்டின் கதாநாயகராக பரூக் அப்துல்லா இருப்பார். திமுக தலைவர் ஸ்டாலின் மாநாட்டை  தொடங்கிவைக்கிறார்.விவசாயிகள் தற்போது நொறுங்கிப்போய் உள்ள நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தியதை நான் வரவேற்கிறேன். ஆனால் பால் உற்பத்தியாளர்களுக்கு ₹4 கூட்டிவிட்டு பால் விலையை ₹6 கூட்டியது என்ன நியாயம். இது  சரியல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : biryani, sambar, Anna's birthday, Vaiko
× RELATED பிரபல ரவுடி குணா மனைவியிடம் போலீஸ் 10 மணி நேரம் விசாரணை