லடாக்கில் சீனா ஊடுருவ காங்கிரஸ்தான் காரணம்: பாஜ எம்பி நம்கியால் குற்றச்சாட்டு

லே: `‘காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் லடாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனால்தான், சீனா ஊடுருவியது.’’ என்று லடாக் தொகுதி பாஜ எம்பி ஜம்யங் ஷெரிங் நம்கியால் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான விவாதத்தின் போது, தனது உணர்ச்சிப் பூர்வமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் 34 வயது இளைஞரான லடாக் தொகுதி பாஜ எம்பி ஜம்யங்  ஷெரிங் நம்கியால். இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டி:காஷ்மீர் பிரிவினை சூழலில் நிலவிய விரோதப் போக்கை மாற்ற, அப்போதைய காங்கிரஸ் அரசு ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் வேலையில் ஈடுபட்டது. இதற்கு லடாக்கை பகடை காயாக பயன்படுத்தியது. முன்னாள் பிரதமர்  நேரு,  `சீனாவை நோக்கி நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும்’ என்று முற்போக்கு கொள்கைகளை உருவாக்கினார். அவை அமல்படுத்தப்பட்ட பின்னர் பிற்போக்கு கொள்கைகளாகி விட்டது. சீனப்படை இந்திய எல்லைக்குள் தொடர்ந்து  ஊடுருவி வருகிறது. அதனை பார்த்து கொண்டு நாமும் தொடர்ந்து அமைதியாக இருக்கிறோம்.

கடந்த 55 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், நாட்டின் பாதுகாப்பு கொள்கைகளில்  லடாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதன் காரணமாகவே சீனப்படையினர்  டெம்சோக்கின் நல்லா பகுதி வரை ஊடுருவியுள்ளனர். அதேபோன்று,  அக்சாய் சின்  முழுவதும் தற்போது சீனா வசம் உள்ளது. இந்த நிலை மாறும். லடாக்கிற்கு பாதுகாப்பு கொள்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் சுயாட்சியின் கீழ் லடாக் சிறப்பான முன்னேற்றம்  காணும்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: