20 ஆண்டுகளில் இல்லாத வகையில் பிரபல நிறுவனங்களில் கார் தயாரிப்பில் முதலீடு குறைப்பு: மந்தநிலையில் இருந்து மீள நடவடிக்கை

புதுடெல்லி: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிக்கட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களும் முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம்,  உற்பத்தி நாட்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளன.கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி ஏறக்குறைய 3,000 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப், அசோக் லேலண்ட், டிவிஎஸ் குழுமம், சுந்தரம் கிளைட்டன், லூகாஸ் டிவிஎஸ் ஆகிய  நிறுவனங்கள் உற்பத்தி விடுப்பு அளிக்கத் தொடங்கி உள்ளன. மோட்டார் பைக் உற்பத்தியில் தன்னிகரற்று விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சந்தையில் நிலவும் தேவை நிலையை ஆய்வு செய்து, கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை, 3 நாட்கள் உற்பத்தியை நிறுத்தியது. அதேபோன்று, அசோக்  லேலண்ட் நிறுவனமும் இம்மாதம் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா (எம்&எம்) சரக்கு கையிருப்பை கட்டுக்குள் வைத்திருக்க உற்பத்தியை நிறுத்தி உள்ளன.

அதன்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில், எம்&எம் 8 முதல் 14  நாட்கள் வரையிலும், டாடா மோட்டார்ஸ் புனே, ஜாம்ஷெட்பூர் அலகுகளில் 8 நாட்களும், மாருதி சுசூகி 3  நாட்களும் உற்பத்தியை நிறுத்தின.இதனால் உற்பத்தி நிறுவனங்களை சார்ந்திருக்கும் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களும் முதல்  காலாண்டில் முதலீட்டு செலவினங்களை முற்றிலும் நிறுத்தி உள்ளன. சுந்தரம் கிளைட்டன் சென்னையில்  பாடி அலகில் கடந்த 16, 17 தேதிகளில் உற்பத்தியை நிறுத்தியது. அதே போன்று, லூகாஸ் டிவிஎஸ் உதிரி பாக உற்பத்தி நிறுவனமும் ஆகஸ்ட் 16, 17 தேதிகளை உற்பத்தி நிறுத்த நாளாக அறிவித்தது. ஆனால், இது குறித்து கடந்த மாதமே  அறிவித்திருந்தது.

இதே நிலை ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மத்தியிலும் காணப்படுகிறது. இதில் ஈடுபட்டுள்ள போஷ்ச் நிறுவனம் தமிழகத்தில் கங்கைகொண்டான் அலகில் 5 நாட்கள், மகாராஷ்டிராவில் நாஷிக் அலகில்  8 நாட்கள் என மொத்தம் 13 நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்திருந்தது. அதேபோன்று, மந்தநிலையை ஈடுகட்ட அவையும் முதலீட்டு செலவினங்களை குறைத்து வருகின்றன. கடந்தாண்டு ₹162 கோடியாக காணப்பட்ட உதிரி பாக உற்பத்தியாளர்களின் முதலீட்டு செலவினம் நடப்பாண்டில் 42 சதவீதம் குறைந்து, ₹94 கோடியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் தொழிற்சாலைகளில் இருந்து  விற்பனைக்காக அனுப்பப்பட்ட கார், எஸ்யூவி வாகனங்களின் எண்ணிக்கையில் 21.5, லாரி, பேருந்துகளின் எண்ணிக்கையில் 13.5, மோட்டார் பைக், ஸ்கூட்டர் எண்ணிக்கையில் 13 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Tags : 20 years, Reducing, car makers , Recovery ,recession
× RELATED பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட...