குழாய் பதித்த பொக்லைன் இயந்திரம் மோதியதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பரிதாப பலி: குன்றத்தூர் அருகே சோகம்

பல்லாவரம்: குன்றத்தூர் அருகே நேற்று அதிகாலை குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் வீட்டின் மீது மோதியதில் சுவர் இடிந்து 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. குன்றத்தூர் - போரூர் பிரதான சாலையில் கொல்லச்சேரி கிராமத்தில் உள்ள திரையரங்கம் அருகே, 10க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கடந்த 30 ஆண்டாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு, மோகன் (26) என்பவர், தனது மனைவி மற்றும் மகள் மாசாணி (5) உள்ளிட்ட 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த சில நாட்களாக கொல்லச்சேரி ஊராட்சி நிர்வாகம் சார்பில், குன்றத்தூர் - போரூர் பிரதான சாலையோரம் குடிநீர் குழாய் பதிப்பதற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மோகன் வழக்கம்போல் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, இவர் குடிசை வீட்டின் அருகே பள்ளம் தோண்டியபாது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் மோகன் வீட்டின் மீது பலமாக மோதியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மோகன் குடும்பத்தினர் மீது  விழுந்தது. இதனால், அவர்கள் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இடிபாடுகளை அப்புறப்படுத்தி மோகன் குடும்பத்தினரை மீட்டனர். ஆனால், மோகனின் மகள் மாசாணி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமி மாசாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய பொக்லைன் உரிமையாளர் மனோகர், ஒப்பந்ததாரர் தினகரன், வீரப்பன், டிரைவர் ஐயப்பன் (32), கிளீனர் உத்திரவேல் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மிரட்டல்

விபத்து தொடர்பாக, குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்மந்தப்பட்ட பொக்லைன் உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்பட 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, இறந்த குழந்தைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என ஒப்பந்ததாரரிடம் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அப்போது, அங்கு திரண்ட ஒப்பந்ததாரர் தரப்பினர், ‘‘₹20 ஆயிரம் தருகிறோம். வாங்கிக்கொண்டு, வழக்கை வாபஸ் பெற்று அமைதியாக சென்றுவிட வேண்டும்,’’ என மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர்.

Related Stories: