பருவமழை தொடங்கி உள்ளதால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் விவரம் குறித்து தினசரி அறிக்கை: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் ஆண்டுதோறும்  பருவமழை காலத்தில் பல்வேறு இடங்களில் நாள் கணக்கில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல்கள் பரவுகிறது. இதை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகையான காய்ச்சலால் நமக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியாமல் ஒருவாரம் கழித்து மருத்துமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாகி அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடு மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 700க்கும் மேற்பட்ட செவிலியர்கள் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக வீடு வீடாக சென்று ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின் போது காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களை மருத்துமனைக்கு அழைத்து சென்று உடனடியாக சோதனை செய்கின்றனர். சோதனை முடிவில் சாதாரண காய்ச்சல் என்றால் அவர்களுக்கு உரிய மருத்து அளிக்கின்றனர்.

அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை மருத்துமனையில் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்த ஆய்வின் மூலம் ஒருவர் எந்தவிதமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக கண்டறிய முடிகிறது. இதனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கவும் முடிகிறது. இதைத் தவிர்த்து காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக மருத்துமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தினசரி அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அதில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்கள் எந்த மாதிரியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேலும் கட்டுமான நிறுவனங்கள், மருத்துமனைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தங்களின் பகுதிகளில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அனுமதி மறுப்பு

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கொசு மருத்து தெளிக்க சென்றால் ஒரு சிலர் வீடுகளுக்கு உள்ளே அனுமதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே மாநகராட்சி ஊழியர்கள் தினசரி எத்தனை வீடுகளுக்கு மருந்து தெளிக்கின்றனர். அதில் எத்தனை வீடுகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்று ஆய்வு நடத்த அனுமதிக்கவில்ைல என்ற தகவலை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: