×

திருமண விழாவில் பரிதாபம் வெடிகுண்டு தாக்குதல் ஆப்கனில் 63 பேர் பலி: 182 பேர் காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 63 பேர் பலியாகின்ர. 182 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிவாத அமைப்புடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என தலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் இரவு திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா நடைபெறும் இடம் பரபரப்பாக இருந்த நிலையில் திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் பலத்த அலறல் குரல்கள் கேட்டன. 20 நிமிடங்கள் அந்த இடத்தை புகைமண்டலம் சூழ்ந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் புகை மண்டலம் காரணமாக மீட்பு பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மண்டபத்திற்கு வெளியே திரண்டிருந்தவர்கள் உறவினர்களை காணாது அழுகையுடனும், கூக்குரலுடனும் காணப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பில் 63 பேர் இறந்தனர். 182 பேர் காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது. உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி கூறுகையில், “ கடந்த சில மாதங்களில் நடந்த தாக்குதலிலேயே மிக மோசமான தாக்குதல் இதுவாகும். இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள்.” என்றார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தான் குண்டு வெடிப்பால் அமைதி பேச்சு பாதிக்காது
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலிபான்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலிபான்களுடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் கச்லாக் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த வெள்ளியன்று ஏராளமானவர்கள் பிரார்த்தனையின் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் தலிபான்கள் தலைவர்  முல்லா ஹைபதுல்லா அக்குனின் இளைய சகோதரரும், மசூதியின் இமாமுமான ஹபீஸ் அகமதுல்லா கொல்லப்பட்டார். தாக்குதலின் போது தலைவர் முல்லா ஹைபதுல்லா மசூதியில் இல்லை. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் தலிபான் தலைவரின் சகோதரர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஆப்கான் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

Tags : Afghan wedding,63 killed, 182 injured , Afghan wedding
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை...