×

பூடானில் பிரதமர் மோடி பேச்சு இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம்

புதுடெல்லி: ‘‘உலகின் மிகச்சிறந்த தொழில் தொடங்கும் சூழல் தற்போது இந்தியாவில் நிலவுகிறது. எனவே, இந்தியாவில் முதலீடுகளை புதுப்பிக்க இதுவே சரியான தருணம்.,’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் பூடான் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் நாளில், மோடி-பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் இடையேயான சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று பிரதமர் மோடி, தலைநகர் திம்புவில் உள்ள ராயல் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பிணைப்பு இயற்கையானது. புவியியல் ரீதியாக மட்டுமல்ல வரலாறு, கலாசாரம், ஆன்மீக பண்பாடு உள்ளிட்ட அம்சங்களிலும் இரு நாட்டு மக்களிடையே தனித்துவம் வாய்ந்த பிணைப்பு உள்ளது. இங்கு எதிர்கால பூடானுடன் உரையாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மாணவர்களாகிய உங்களிடம் சுறுசுறுப்பு, செயல்திறனை காண்கிறேன். இது, மிகச்சிறந்த பூடானின் வளமான எதிர்காலத்தை வடிவமைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
 
பூடானில் உங்களை கவர்ந்தது எது என உலகின் எந்த பகுதிக்கு சென்று கேட்டாலும், அதற்கான பதில் ‘கிராஸ் நேஷனல் ஹேப்பினஸ்’ (மக்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை வைத்தே தேசத்தின் வளர்ச்சியை கணக்கில் கொள்வது) என்ற கருத்தாக்கத்தைத்தான் சொல்வார்கள். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மகிழ்ச்சியின் அருமையை உணர்ந்திருக்கிறது பூடான். மனித நேயம், ஒற்றுமை, சகோதரத்துவத்தை உணர்ந்த நாடு பூடான். அந்த மனிதநேயம், என்னை வரவேற்க இங்கு தெருக்களில் கூடியிருந்த குழந்தைகளின் புன்னகையில் தெரிந்தது. அந்த புன்னகை எப்போதும் என் மனதில் இருந்து நீங்காது.மனித நேயமே மகிழ்ச்சி என்ற செய்தியை உலகிற்கு வழங்கியிருக்கிறது பூடான். எங்கு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அங்கு மனித நேயம் இருக்கும். எங்கு மனித நேயம் இருக்கிறதோ அங்கு மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அதன் மூலம், கிடைக்கும் அமைதி, நம்மை நிலையான வளர்ச்சியை அடையச் செய்யும். பூடானில் வளர்ச்சி, சுற்றுச்சுழல், கலாச்சாரம் என்பதை தனித்தனியாக பார்ப்பதில்லை. அவை ஒன்றிணைந்தவை. எனவே, பூடானிடம் இருந்து இந்த உலகம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் உள்ளது. இதன் மூலம் 5 கோடி ஏழை குடும்பங்கள் சுகாதார பாதுகாப்பை பெறுகின்றன. உலகில் மலிவான இணைய சேவை இந்தியாவில் உள்ளது. இது கோடிக்கணக்கானவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேம்படுத்துகிறது. உலகின் மிகச்சிறந்த தொழில் தொடங்கும் சூழல் தற்போது இந்தியாவில் நிலவுகிறது. எனவே, இந்தியாவில் முதலீடுகளை புதுப்பிக்க இதுவே சரியான தருணம். இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, பரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, நேற்று மாலை டெல்லி திரும்பினார்.



Tags : PM Modi's , Bhutan,perfect time,invest, India
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...