×

இமாச்சல், உத்தரகாண்ட்டில் கனமழைக்கு 26 பேர் பலி: நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

சிம்லா: இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் பெய்த கனமழைக்கு 28 பேர் பலியாகி உள்ளனர். பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், ரயில், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு 18 பேர் பலியாகி உள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் தலமான சிம்லாவில் மட்டும் 8 பேர் பலியாகி உள்ளனர். சம்பாவில் 2 பேரும், குலு, சிர்மோர், சோலன், பிலாஸ்பூர், லாஹல் ஸ்பிதி பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்துள்ளார். கனமழையால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பபெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையால் ரூ.490 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், லாஹல் ஸ்பிதி பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் பயிர்கள் நாசமாகி இருப்பதாகவும் முதல்வர் ஜெய் ராம் தாகூர் கூறி உள்ளார்.

நிலச்சரிவால் சிம்லா-கல்கா இடையேயான ரயில் போக்குவரத்து முடங்கி உள்ளது. சம்பா, குலு, கங்கரா பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாக்ரா, போங்க், பீஸ் உள்ளிட்ட ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், உத்தர்காசி மாவட்டம் மோரி பகுதியில் நேற்று திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்தது. சுற்றுப்புற கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அப்பகுதியில் 8 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. டேராடூன் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானார்.

அங்கு மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கைலாஷ்-மானசரோவர் யாத்திரை பாதையில் நிலச்சரிவு காரணமாக, யாத்திரீகர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதே போல, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரிலும் ஒருசில இடங்களில் நேற்று கனமழை பெய்தது. முக்கிய ஆறுகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tags : Heavy rains,kill, 26 people, Himachal Pradesh
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...