பயிற்சி ஆட்டத்தில் புஜாரா அபார சதம்

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. முதல் டெஸ்ட் ஆன்டிகுவா, நார்த் சவுண்டு மைதானத்தில் 22ம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் விளையாடி வருகிறது. ஆன்டிகுவா, கூலிட்ஜ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர்.

Advertising
Advertising

அகர்வால் 12, ராகுல் 36 ரன்னில் வெளியேற, கேப்டன் அஜிங்க்யா ரகானே 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். புஜாரா - ரோகித் ஷர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தது. ரோகித் 68 ரன் (115 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடி சதம் அடித்த புஜாரா 100 ரன்னுடன் (187 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) பேட்டிங்கை முடித்துக் கொண்டார் (ரிடயர்டு). ரிஷப் பன்ட் 33 ரன் எடுத்து (53 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறினார். மழை காரணமாக நேற்று 2ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் என்ற முதல் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஹனுமா விஹாரி 37 ரன், ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஏ பந்துவீச்சில் ஜொனாதன் கார்ட்டர் 3, ஹார்டிங், பிரேசர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

Related Stories: