அசையா சொத்துக்கள் உள்ள கோயில்களிலும் செயல் அலுவலர்களை நியமிக்க முடிவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் வருமானம் மற்றும் அசையும், அசையாக சொத்துக்களை கவனிக்கும் வகையில் இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர்கள் என 628 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் வருமானம் இல்லாத மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் உள்ள பெரும்பாலான கோயில்களில் செயல் அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், அந்த கோயில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. அவர்களிடம் இருந்து ேகாயில் சொத்துக்களை மீட்கும் வகையிலும், அவற்றை பாதுகாக்க செயல் அலுவலர்களை நியமனம் செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இணை ஆணையர் மண்டலங்களில் தற்போதுள்ள செயல் அலுவலர் பணித்தொகுதிகளை மறுசீரமைத்து நிர்வாகத்தை மேம்படுத்த ஏதுவாக புதிதாக செயல் அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்துவது குறித்து விரிவான அறிக்கை அனுப்பிட இணை ஆணையர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டணச்சீட்டுகள், தனியாக செயல் அலுவலர் தொகுதி ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை நாளைக்குள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. அறிக்கை சமர்பிக்க தவறினால், வருகிற 23ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: