5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: வாகன உற்பத்தி துறையில் 5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகவும் உடனடி நடவடிக்கை தேவை என்றும் மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் வாகன உற்பத்தி, விற்பனை பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் குறியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய வாகனங்கள் விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதற்கு மூலப்பொருட்கள் விலையுயர்வு, மத்திய அரசின் பாரத் ஸ்டேஜ் விதிமுறைகள், புதிய பாதுகாப்பு விதிகள், பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கியது மற்றும் பிற காரணங்களால் ஏற்பட்ட விலையுயர்வும் காரணமாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்திய வாகன உறபத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) அறிக்கையின்படி ஏப்ரல் - ஜூலை வரையிலான காலாண்டில் கார், எஸ்யூவி விற்பனை 21.5 சதவீதம் குறைந்துள்ளது. லாரிகள், பஸ் விற்பனை 13.5 சதவீதமும், இருசக்கர வாகன விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளதாக கூறியுள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கு ஏற்ப உற்பத்தியை குறைத்து வருகின்றன. அதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் இல்லா விடுமுறை நாளாக சில நாட்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

 இந்நிலையில் மும்பையை சேர்ந்த எழுத்தாளர் கிரண் மன்றல் ஆட்டோமொபைல் துறையில் 5 லட்சம் பேர் வேலையிழப்பு என்ற செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவரின் டிவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, தமிழக அமைச்சர் பாண்டியராஜன் டிவிட்டரில் கருத்து பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது: எச்சரிக்கை, இந்தியாவிலேயே வாகன  உற்பத்தித்துறையில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை அளித்து தொழிலாளர்கள் வேலையிழப்பை தவிர்க்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜனின் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: