காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு 40 ஆயிரம் அத்தி மரக்கன்று நடும் விழா: காணொலி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் நினைவாக 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகள் நடும் விழாவை காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்.  காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி  வரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு  முறை நடப்பதால் இதன் நினைவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆயிரம்  அத்தி மரக்கன்றுகள் நட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி  திருப்போரூர் ஒன்றியத்தில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தை திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய  சிறுதாவூர் கிராமத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. சென்னை தலைமைச்  செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம்  அத்தி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதே நேரத்தில்  சிறுதாவூர் கிராமத்தில் திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் பிரகாஷ்பாபு, வட்டார  வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் ஆகியோர் அத்தி மரக்கன்று களை நட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோன்று  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட  ஆட்சியர் பொன்னையா அத்தி மரக்கன்றுகளை நட்டார்.

அரசு அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி

அரசு சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட எம்.பி.  செல்வம், மற்றும் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. இதயவர்மன் ஆகியோருக்கு  தகவல் கூட தெரிவிக்கப்படவில்லை. முதல்வரே தொடங்கி வைக்கும் விழாவில்  சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்காதது குறித்து  தி.மு.க.வினர் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசு  அதிகாரிகளை கேள்வி எழுப்பினர். அதேபோன்று சிறுதாவூர் கிராமத்தில் நடைபெற்ற  விழாவில் உள்ளூர் மக்களுக்கு கூட தகவல் அளிக்கப்படவில்லை என்று பொதுமக்கள்  குற்றம் சாட்டினர்.

Related Stories: