காண்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: காண்டூர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: பரம்பிக்குளம், தூணக்கடவு நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால், காண்டூர் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளுக்கு வரும் நீர் தடைப்பட்டுள்ளது. எனவே, பழைய, புதிய பாசன விவசாயிகள் நீர் இன்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வாழும் நாகர்ஊத்து எனும் கிராமம் முற்றிலுமாக அழிந்து விட்டது. கடந்த முறை காண்டூர் கால்வாயைச் செப்பனிடும்போது, பல சிற்றோடைகளைத் தடுத்து நிறுத்தி, காண்டூர் கால்வாய்க்குத் திருப்பி விட்டனர். எனவே, அந்த வழியில், திடீரெனப் பெருமளவில் நீர் வந்ததே கால்வாய் உடைப்பிற்குக் காரணம் ஆகும்.

Advertising
Advertising

எனவே, காண்டூர் கால்வாயை உடனடியாகச் சீரமைத்து, பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிற்றோடைகளைத் திசை திருப்பாமல், அவற்றின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் நல்லாற்றுப் பாசன விவசாயிகள் சிறிதளவேனும் பயன்பெறக்கூடிய நிலை ஏற்படும்.பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், இதுவரை கட்டப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்தினால், இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம்.ஆகவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் காண்டூர் கால்வாயைச் சீரமைக்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: