×

துறையூர் அருகே கோயிலுக்கு சென்றபோது சோகம் 70 அடி ஆழ கிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி: 14 பேர் படுகாயம்

திருச்சி: துறையூர் அருகே கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக சென்றபோது, லோடு ஆட்டோ டயர் வெடித்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எரகுடி அடுத்த எஸ்என் புதூரில் உள்ள அங்காயி அம்மன் பிடாரி கோயிலுக்கு கிடாவெட்டி நேர்த்தி கடன் செலுத்துவதற்காக முசிறி பேரூரை சேர்ந்த கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர். இதற்காக  22 பேர் ஒரு லோடு ஆட்டோவில் நேற்று புறப்பட்டு சென்றனர். இந்த ஆட்டோ எரகுடி அருகே மதியம் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவின் முன்பக்க டயர் திடீரென வெடித்து தாறுமாறாக சென்றது. ஆட்டோவில் இருந்தவர்கள் அலறினர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோரம் இருந்த 70 அடி ஆழமுள்ள  கிணற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். பின்னர் துறையூர் போலீசாருக்கும், தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கலெக்டர் சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். யணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் விழுந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டனர். இந்த கோர சம்பவத்தில் குணசீலன் (55), குமாரசி (43), கோமதி (40), கயல்விழி(35), எழிலரசி (40),  சரண்குமார் (10), சஞ்சனா (5), யமுனா(8) ஆகிய 8 பேர் மூச்சுத்திறணறி இறந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத  பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் போலீசார் துறையூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கிணற்றில் விழுந்த லோடு ஆட்டோ மீட்கப்பட்டது.

சரியான தடுப்பு இல்லை...
விபத்து நடந்த சம்பவ இடமான சாலையோர கிணற்றுப்பகுதியில் பாதுகாப்புக்கான தடுப்பு அமைக்கப்படவில்லை. தகரத்தால் வேலி போன்று அமைத்துள்ளனர். கான்கிரீட் போன்று சிமென்ட் தடுப்புச்சுவர் அமைத்திருந்தால் இதுபோன்ற கோர விபத்து ஏற்பட வாய்ப்பிருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Tragedy, temple , Thiruvarur
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...