பால் விலை உயர்வுக்கு தலைவர்கள் கண்டனம்

* இன்று முதல் அமலுக்கு வருகிறது

* குறைக்க முடியாது என எடப்பாடி விளக்கம்

சென்னை: ஆவின் பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் தலையில் கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது என்று தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பால் விலை உயர்வை குறைக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 உயர்த்தி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இருநிலை சமன்படுத்திய ஆவின் பால் (மெஜந்தா) ஒரு லிட்டர் 34லிருந்து 40 ஆக விலை உயர்கிறது. அதே ேபால சமன்படுத்திய பால் (நீலம்) ஒரு லிட்டர் 37லிருந்து 43, நிலைப்படுத்திய பால் (பச்சை) ஒரு லிட்டர் 41லிருந்து 47, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ஒரு லிட்டர் 45லிருந்து 51 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பால் விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பால் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை! தரமான பால் விநியோகத்தை உறுதி செய்வது பெரும் சுமை! தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? கடமை தவறிய அதிமுக அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா.வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்): விவசாயிகள் நொடிந்து போய் இருக்கிற நேரத்தில், பசு, எருமை மாடு வைத்திருக்க விவசாயிகளுக்கு பால் உற்பத்தி விலையை உயர்த்தி தமிழக அரசு கொடுத்து இருப்பதை நான் வரவேற்கிறேன். பால் உற்பத்தியாளர்கள் கஷ்டங்களை உணர வேண்டும். ஆனால் அதே நேரத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விற்பனை விலை அதிகமாக உயர்த்தியது சரியல்ல.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்): பால் விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. மாநில அரசு இந்த விவகாரத்தில் நிதானமாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். மக்களிடம் கலந்து, கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும். பெரும்பான்மையான மக்கள் பாலை உபயோகிக்கின்றனர். அவர்கள் நலன் பாதிக்காத விதத்தில் அரசு முடிவு எடுக்கவேண்டும். பால்விலை உயர்வு கண்டிக்கத்தக்கது, நினைக்கும் போதெல்லாம் இதுபோல் விலை உயர்த்தக்கூடாது.திருமாவளவன்(விசிக தலைவர்): தமிழக அரசு திடீரென பால் விலையை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை எளிய மக்களின், நடுத்தர வருவாயுள்ள மக்களின், குழந்தைகளின் சத்துணவாக பால் இருக்கிறது. இந்நிலையில், குறைந்த, நடுத்தர வருவாயுள்ள குடும்பங்களுக்கு இந்த விலை ஏற்றம் என்பது பெரும் நெருக்கடியாகும். பால் விலை உயர்வுக்கு மாட்டுத்தீவனங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உட்பட பல காரணங்களை தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கூறினாலும் அது ஏற்புடையதல்ல. ஏழை எளிய மக்களின், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் தமிழக அரசு உடனடியாக இந்த பால் விலை ஏற்றத்தை திரும்பப்பெற வேண்டும். அரசு மருத்துவமனைகள், முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், காப்பகங்கள் ஆகியவற்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையை விட குறைந்த விலையில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா.முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பாலை கொள்முதல் செய்யும் தமிழக அரசு பசும்பால் லிட்டருக்கு 4, எருமை பால் லிட்டருக்கு 6 வரை கொடுக்கிறார்கள். ஆனால், ஆவினில் விற்கப்படும் எல்லா பாலுக்கும் சேர்த்து ₹6 வரை

உயர்த்தியுள்ளனர். பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் இப்படி விலையை உயர்த்தி இருப்பது சரியல்ல. சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பேசும்போது, பொதுமக்கள் நலன் பாதிக்கப்படாதவாறு பால் உயர்வு இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு பசும்பால் உற்பத்தியாளருக்கு ரூ.4, அதை வாங்கும் நுகர்வோருக்கு ரூ.6 உயர்த்தி நிர்ணயம் செய்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த விலை உயர்வை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.கே.பாலகிருஷ்ணன் ( மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்) : பால் விலையை லிட்டருக்கு ரூ.6 வரை சகட்டு மேனிக்கு உயர்த்தியுள்ளனர். கொள்முதல் விலை ஏற்றினால் கூட விற்பனை விலையை இந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மாதிரியான அத்தியாவசியமான பொருட்களை அப்படியே வாங்கி லாபத்திற்கு விற்க கூடாது. வியாபார நோக்கத்தில் அரசு ஈடுபட கூடாது. இது போன்ற பொருட்களுக்கு அரசு மானியம் தந்து விலை உயர்த்த கூடாது. ஒரு வியாபாரி செய்கிற வேலை அரசு செய்கிறது. கொள்முதல் விலை உயர்த்துவதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் விற்பனை விலையை உயர்த்துவதில் எந்த விதத்தில் நியாயம். இதை வியாபார நோக்கோடு அரசு பார்க்க கூடாது.டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்): பால் விற்பனை விலையை பழனிச்சாமி அரசு திடீரென லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. அதிலும், விலை உயர்வு குறித்த அமைச்சரின் பேச்சு ஆணவனத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. ஆவினில் தலைவிரித்தாடும் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்வதுடன் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை முறையாக செயல்படுத்தினாலே விற்பனை விலையை அதிகரிக்காமல் கொள்முதல் விலையை உயர்த்தி தர முடியும். எனவே, பால் விற்பனை விலை உயர்வை பழனிச்சாமி அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

வி.எம்.எஸ்.முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): தமிழக அரசு பால் விலையை ரூ.6 ஆக உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களிடமும், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளிடமும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. அண்மையில் ஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழலை அப்படியே மறைத்து விட்டு, அந்த ஊழல் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பாலின் விற்பனை விலையை ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 என உயர்த்தி, சாதாரண பொதுமக்கள் தலையில் அந்த சுமையை ஏற்றியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதால் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் நெய், பால்பவுடர், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் ஆகிய பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டீக்கடை, ஓட்டல்களில் விலை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடித்தட்டு மக்களை பாதிக்கும் இந்த பால் விலை உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இதேபோல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனம் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் பால் விலை சில ரூபாய்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் மக்களின் இதயங்களை நொருங்க வைக்கும் வகையில், முதல்வர் எடப்பாடி சேலத்தில் கூறியதாவது, தமிழகத்தில் பல இடங்களில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து கட்டணம் அதிகமாகி உள்ளது .

இவற்றை கருத்தில் கொண்டு ஐந்து வருடங்களுக்கு பிறகு பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பால்விலை குறைவுதான்’’ என்று கூறினார். இதன் மூலம் பால் விலை உயர்த்தப்பட்டதை குறைக்க முடியாது என்று பட்டவர்த்தனமாக முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காபி, டீ விலை எவ்வளவு?

பால் விலை உயர்வை காரணம் காட்டி டீ, காபி விலையை உயர்த்த உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். சிறிய கடைகளில் 10க்கு விற்கப்பட்ட டீ 12. ஸ்பெஷல் டீ, இஞ்சி டீ போன்றவை 12லிருந்து 15 ஆக விலை உயர்கிறது. காபி 12 லிருந்து 15 வரை உயரும் என்று தெரிகிறது. பெரிய ஓட்டல்களில் டீ, காபி விலையை ₹5 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசித்து வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பால் முதல் ஐஸ்கிரீம் வரைவிலை அதிகரிப்பு

ஆவின் பால் ஒரு லிட்டர் 6 உயர்த்தப்பட்டது. இதன் விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது. தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மோர், தயிர், ஐஸ்கிரீம், லஸ்சி, பனீர், பாதாம் மிக்ஸ் பவுடர், நறுமணமூட்டப்பட்ட பால், யோகர்ட், புரோயாட்டிக் தயிர் போன்றவற்றின் விலையையும் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: