அருண்ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதனை தொடர்ந்து உடல்நிலை குறித்து விசாரிக்க எய்ம்ஸ் பிரதமர் மோடி வருகிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்தாண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவரது உடல்நிலை சரியில்லாததால், அவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்க்கப்பட்டார். இதய மற்றும் நரம்பியல் மையத்தின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலையை நிபுணர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்தித்தனர். அதன் பின்னர், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், ஜிஜேந்திர சிங் ஆகியோரும் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். கடந்த வாரம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவரை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஜெட்லியை சந்தித்தார். ஜெட்லியை கண்காணிக்கும் மருத்துவர் குழுவிடம் அவரது உடல்நிலைப்பற்றி கேட்டறிந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டன. அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து நுரையீரல், இருதயம் உள்ளிட்ட பிரிவுகளின் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. தற்போது அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அருண்ஜெட்லியின் உடல்நிலை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து பூடான் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு இன்று இந்தியா திரும்பி உள்ள பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தர உள்ளனர்.

Related Stories: