சேலம் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்

சேலம்: தமிழகத்தில் தூத்துக்குடி, நாகப்பட்டணம், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடலில் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுகின்றன. கேரளாவில் பெய்து வரும் மழையால், அங்கு கடலில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது சேலம் மார்க் கெட்டுக்கு தூத்துக்குடி, நாகப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் 30 முதல் 40 டன் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களின் விற்பனை களைக்கட்டியது. நாகப்பட்டணத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு 15 கிலோ மெகா சைஸ் கடல் கெளுத்தி மீன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனை மீன்வாங்க வந்த பொதுமக்கள் பார்த்து சென்றனர். இந்த மீன் கிலோ ₹150க்கு விற்கப்பட்டது. இதுகுறித்து சேலம் வ.உ.சி. மார்க்கெட் மீன் வியாபாரிகள் கூறியதாவது: சேலத்தில் பட்டை கோயில், கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, குகை, அஸ்தம்பட்டி, காந்திரோடு, செவ்வாய் பேட்டை, சீலநாயக்கன்பட்டி, அன்னதானப்பட்டி, நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் மீன்கடைகள் உள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களின் விற்பனை களைக் கட்டியது.

ஒரு கிலோ வச்சரம் ரூ650ல் இருந்து ரூ750, பால்லெட் மீன் ரூ450, வவ்வால், கண்ணாடி பாறை, விளாமீன், முறல், சங்கரா உள்பட பல வகை மீன்கள் ₹280 முதல் ₹350 வரை விற்பனை செய்யப்பட்டது.  தற்போது தமிழக மீன்கள்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்தில் கேரளா மீன்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. அப்போது மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: