தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ரெயின்போ நகரில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு: வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

புதுச்சேரி: புதுவையில் 3 வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக காமராஜர்நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகரில் ஒருசில பகுதிகள் மழைவெள்ளத்தில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று காலை அதிகாரிகளுடன் அங்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். ரெயின்போநகர் 3வது குறுக்கு தெருவில் பாதாள சாக்கடையில் இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, 4வது குறுக்கு தெருவுக்கு சென்ற நமச்சிவாயம், அங்கு வாய்க்காலில் மழைநீர் தேங்கி நிற்பதை பார்த்தார்.

6வது குறுக்கு தெருவில் மழைநீர் வாய்க்காலில் செல்ல முடியாமல் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றது. மேலும், அங்குள்ள ஒரு வீட்டுக்குள் மழைநீர் புகுந்துள்ளதை பார்த்தார். அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் பாதிப்பை கேட்டறிந்த நமச்சிவாயம், உடனடியாக தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகு, 7வது குறுக்கு தெருவிலும் மழைநீர் தேங்கி இருப்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறும்போது, ரெயின்போ நகர் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பது குறித்து இப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் இங்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டேன். கால்வாய் அடைப்புகளை அகற்ற கூறியிருக்கிறேன். அதேபோல், கால்வாய்களை ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தான் மழை தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணம். இதனால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். எதிர்காலத்தில் மக்களுக்கு இதுபோல் பாதிப்பு ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், மழைநீர் செல்லும் கால்வாயை ஒரு தனிநபர் அடைத்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணை பெற்றுள்ளார்.

நீதிமன்றத்தை அணுகி அந்த இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். பூமியான்பேட்டை, புஸ்சி வீதியில் முன்பு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும். அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் இப்போது அங்கு தண்ணீர் தேங்குவது கிடையாது. மேலும், ஏரி, குளங்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். 25 ஏரிகளும், 100க்கும் மேற்பட்ட குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராமநாதன், இளநிலை பொறியாளர் ஜெயசங்கர், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் ரெயின்போநகர் மக்கள், காங்., பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Related Stories: