×

ஆத்தூர் அருகே இன்று அதிகாலை விபத்து: 30 அடி பாலத்திலிருந்து கவிழ்ந்து பால் டேங்கர் லாரி தீப்பற்றியது.. டிரைவர் பரிதாப பலி

ஆத்தூர்: ஆத்தூர் அருகே இன்று அதிகாலை, 30 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் பால் டேங்கர் லாரி தீப்பற்றியது. இதில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு, டேங்கர் லாரி நேற்று நள்ளிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு புறப்பட்டது. லாரியை வாழப்பாடி அருகே சேசன்சாவடியை சேர்ந்த ஆனந்த் (23) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அப்பம்மசமுத்திரம் கிராம பகுதியில் உள்ள 30 அடி உயர பாலத்தில் லாரி சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் சுவற்றில் மோதிய லாரி, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

கீழே விழுந்த வேகத்தில் லாரியில் தீப்பற்றியது. டிரைவர் ஆனந்த், லாரியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனிடையே பாலத்தில் இருந்து கவிழ்ந்த லாரி தீப்பற்றி எரிவதை பார்த்து, அந்த வழியாக சென்றவர்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து ஆத்தூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு உயிரிழந்து கிடந்த டிரைவர் ஆனந்தின் சடலத்தை கைப்பற்றி, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், டிரைவர் ஆனந்தின் தூக்க கலக்கத்தால் விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : The accident, occurred , near Attur
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...