அமராவதியில் திறக்கப்பட்ட நீர் அணைப்புதூர் தடுப்பணைக்கு வந்தது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

க.பரமத்தி: குடிநீருக்காக திறக்கப்பட்ட அமராவதி அணை தண்ணீர் அணைப்புதூர் தடுப்பணைக்கு வந்து சேர்ந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அணை 90 அடி உயரம், 4047 மில்லியன் கனஅடி மொத்த கொள்ளளவு கொண்டது. இந்த அணை நீரை நம்பி கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. மேலும் குடிநீருக்காகவும் பொதுமக்கள் அமராவதி அணையை நம்பி உள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் மூலத்துறை என்ற இடத்தில் கரூர் மாவட்ட எல்லையை அமராவதி ஆறு தொடுகிறது.

இங்கிருந்து அணைபுதூர், சின்னதாராபுரம், ஒத்தமாந்துறை, ராஜபுரம், மற்றும் செட்டிபாளையம், சுக்காலியூர், பெரிய ஆண்டாங்கோவில், திருமாநிலையூர், பசுபதிபாளையம், பஞ்சமாதேவி, வழியாக திருமக்கூடலூர் சென்று காவிரியில் கலக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து பாசன நிலங்களுக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலும், அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, அமராவதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன்படி கடந்த 14ந்தேதியில் 2ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லை பகுதியான சின்னதாராபுரம் அருகேயுள்ள அணைப்புதூர் தடுப்பணையை இன்று காலை 6.30மணிக்கு வந்தடைந்தது. பிறகு தடுப்பணையை தாண்டி கரூர் நோக்கி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.  இதனால் வறட்சியினால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை சீராகும். இப்பகுதியிலுள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டமும் உயரும். இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: