×

அம்மன் கோயில் விழா

பரமக்குடி: பரமக்குடி காந்திநகர் உய்யவந்தாள் அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் பக்தர்கள் கரகம், பால்குடம், வேல்குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் உய்யவந்தாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கிராமத்திற்கு காவல் தெய்வமாக உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊத்துவது. மழை வேண்டி முளைப்பாரி எடுத்து பெண்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இந்தாண்டு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுன் ஆடி மாத திருவிழா தொடங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாடியும் வந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி திருவிழாவில் கிராமத்தலைவர் திருப்பதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கிராமத்திற்கு பாத்தியப்பட்ட கண்மாயில் கரைத்தனர். அப்போது ஆண்களும், பெண்களும் பால்குடம் எடுத்து, வேல்குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை கிராம செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சுந்தராஜன் தலைமையில் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags : Temple of Amman, ceremony
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்