வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன் பக்தர்களின் பார்வைக்கு ஏழுமலையானின் 1296 நகைகள் 3டி அனிமேஷனில் வைக்க முடிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானின் 1296 நகைகளை 3டி அனிமேஷனில் பக்தர்களின் பார்வைக்கு  வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்திற்காக தங்கம், வைரம், வைடூரியம், கோமேதகம், மரகத பச்சை என பல விலையுயர்ந்த கற்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட ஆபரணங்களை  மன்னர்கள்,  பேரரசர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். மேலும் தற்போதும் பக்தர்கள் அதிகளவு நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

சுவாமியின் ஆபரணங்களை  திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால்  பாதுகாப்பு குறைபாடு மற்றும் ஆகம விதிகளுக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டதால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில்  தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி உத்தரவின்பேரில், சுவாமியை அலங்கரிக்க கூடிய 1296 தங்க நகைகளை 3டி அனிமேஷன் இமேஜிங் முறையில் ரூ40 கோடியில் தயார் செய்து திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகள் வரும் செப்டம்பர் 30ம்தேதி  பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 3டி அனிமேஷன் இமேஜிங் செய்வதற்காக ரூ40 கோடியை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: