விவசாயத்திற்கு பெரியாறு நீர் கிடைக்குமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு பெரியாறு நீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143கண்மாய்கள் உள்ளது. இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன பகுதியாக உள்ளன. பெரியார் பாசன பகுதி மேலூர் பிரிவின் கீழ் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக மேலூர் பிரிவில் ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிறகு மிகக்குறைவான அளவு நீர் திறக்கப்பட்டது. இந்த நீரும் பாசன பகுதியில் உள்ள சில கண்மாய்களுக்கு மட்டுமே சென்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது பெரியாறு நீர் வைகை அணையில் நிரப்பப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் பெரியாறு பாசன பகுதிகளுக்கு நீர் திறக்கப்படும் என கூறப்படுகிறது. வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிகளுக்கு ஒரு போக சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் போது சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நீர் திறக்கப்படும் ஆண்டுகளில் இதுபோல் அரசு அறிவிப்பு செய்தாலும், மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் வழங்கப்படுவதில்லை. பெரியாறு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு மதுரை மாவட்ட எல்கையான குறிச்சி வரை வரும்.

ஆனால் அடுத்த கிராமமான சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கள்ளராதினிப்பட்டி கண்மாய்க்கு நீர் திறக்கப்படாது. ஆண்டுதோறும் இப்பிரச்சினை தொடர்ந்து வருகிறது. மதுரை மாவட்டத்திற்கு முதல்போக சாகுபடிக்கு நீர் திறக்கும்போதே வறட்சி மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கும் நீர் திறக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் அதுபோல் செய்வதில்லை. மதுரை மாவட்டத்திற்கு நீர் திறக்கும் போது சிவகங்கை மாவட்டத்தின் கடைமடை பகுதியான சோழபுரம் எட்டிச்சேரி கண்மாயை எட்டும் வரை நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரியாறு பாசன விவசாயிகள் கூறியதாவது: பெரியாறு கால்வாயில் நீர் திறந்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு எவ்வளவு பங்கு நீர் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில்லை. பெரியாறு கால்வாயில் நீர் தருவது மற்றும் கால்வாய் பராமரிப்பு பொறுப்பு மதுரை பொதுப்பணித்துறை வசம் உள்ளது. கண்மாய்கள் பராமரிப்பு பொறுப்பு சிவகங்கை பொதுப்பணித்துறை வசம் உள்ளது. இரண்டு மாவட்ட பொதுப்பணித்துறையினரிடமும் இப்பிரச்சினை குறித்த தொடர்போ, திட்டமிடலோ இல்லை.

கடந்த ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், கலெக்டர் சார்பில் நீர் திறக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய நீரை விவசாய காலத்தில் முன் கூட்டியே பெற மாவட்ட நிர்வாகம், மாவட்ட அமைச்சர் முயற்சி செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories: