அமைச்சர் செல்லூர்ராஜூவை வரவேற்க 2.30 மணிநேரம் காக்க வைக்கப்பட்ட மாணவிகள்

மதுரை: லேப்டாப் வழங்கும் விழாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தாமதமாக வந்ததால், மாணவிகள் 2.30 மணிநேரம் காத்திருந்து அவதியடைந்தனர். மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் விழா, ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை வகித்தார். மதுரை எம்பி வெங்கடேசன் பங்கேற்றார். விழா காலை 9 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். இதில் சாரணர் சீருடையுடன் வந்திருந்த மாணவிகள் விழா நடந்த அரங்க வளாகத்தில் அமைச்சரை வரவேற்பதற்காக தரையில் அமர வைக்கப்பட்டனர்.

ஆனால் அமைச்சர் 11.30 மணிக்குத்தான் வந்தார். இதனால் இரண்டரை மணி நேரம் மாணவிகள் தரையில் அமர்ந்தபடி காத்திருந்து அவதியடைந்தனர். தொடர்ந்து 4,262 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.43 கோடி மதிப்பிலான லேப்டாப்களை வழங்கி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘இந்த விழாவிற்கு வந்துள்ள வெங்கடேசன் எம்பி, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர். மதுரையின் சிறப்புகள் குறித்து அவர் நூல்கள் எழுதி இருக்கிறார். அவர் மதுரையின் மேம்பாட்டுக்கு மத்திய அரசிடமிருந்து நிறைய நிதிகளை பெற்றுத்தருவார் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

Related Stories: