ஒருநாள் மழைக்கே தத்தளித்த வேலூர் மாநகர்: நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்.. அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் மழை வருவது போல் போக்குகாட்டி வந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சாரலுடன் லேசான மழை தொடங்கி படிபடியாக அதிகரித்தது. நள்ளிரவில் இடி, மின்னலுடன் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. நேற்று 7 மணிக்கு பிறகு படிப்படியாக மழை குறைந்தது. இதனால் முக்கிய சாலைகள், சர்வீஸ் சாலைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியது. புதிய பஸ் நிலையம், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

திடீர் நகர், இந்திரா நகர், கன்சால்பேட்டையில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். சுமார் 5 அடி தண்ணீரில் நீந்தி வெளியே வந்தனர். வீடுகளில் இருந்த பொருட்களும் மழைநீரால் சேதம் அடைந்தது. மழைநீர் வரத்து கால்வாய் மற்றும் கால்வாய் ஆக்கிரமித்து கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளாக மாறியுள்ளதால் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் சூழந்தது துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்கள் மீது சிறுக, சிறுக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கி, தற்போது பெரும்பாலான நீர்வரத்து கால்வாய்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு குடியிருப்புகளாக மாறியுள்ளது.

சர்வீஸ் சாலைகளில் மெக்கானிக் ஷெட்கள், மற்றும் கடைகளுக்காக மழைநீர் கால்வாயில் மண்ணை கொட்டி மூடியுள்ளனர். இதனால் மழைநீர் செல்வதற்கான வழித்தடங்கள் இல்லாததால் அதேபகுதியில் கழிவுநீருடன் தேங்கி நிற்கிறது. ஒரு நாள் மழைக்கே மாநகரில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழந்ததுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் மோசமாக மாறும்.  எனவே இனி வரும் காலங்களில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories: